தமிழகம்

மனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் 4 பேருக்குமேல் அழைத்து வர தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு…

சென்னை:-

வேட்புமனு தாக்கலின் போது 4 பேருக்கு மேல் வரக்கூடாது என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10-ந்தேதி தேர்தல் தேதி அறிவித்த உடனேயே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. இதனை தொடர்ந்து 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க இருப்பதையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேலும் சில விதிமுறைகளை அறிவித்துள்ளார்.

அதன்படி வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு 4 பேருக்கு மேல் வரக்கூடாது. வேட்பாளர்கள் வாகனத்தின் பின்னால் 3 வாகனங்கள் தான் வர வேண்டும். நீண்ட அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டது. என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்திய ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பல்வேறுபுதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மத்தியிலும்-மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சியினர் தங்கள் அலுவலக அதிகாரத்தை தேர்தல் களப்பணிகளுக்காக பயன்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்த வகையிலும் இடம் அளிக்க கூடாது. அமைச்சர்கள் தங்கள் அலுவலக பார்வையிடுவதையும், தேர்தல் பணிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் மேற்கொள்ளக்கூடாது. அரசு இயந்திரத்தையும் ஊழியர்களையும் தங்களது தேர்தல் பணிக்காக பயன்படுத்தக்கூடாது.

பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்தும் திடல்கள் போன்ற பொது இடங்கள் ஹெலிபேடு போன்றவைகளை ஆளும் கட்சியினர் மட்டும் பயன்படுத்தக்கூடாது. மற்ற கட்சியினரும் வேட்பாளர்களும் கேட்கும் போது அவர்களுக்கும் வசதிகள் வழங்கப்பட வேண்டும். அரசு விருந்தினர் மாளிகை, ஓய்வு இல்லங்கள், மற்றும் பிற தங்கும் இடங்களை ஆளும் கட்சியினர் அதன் வேட்பாளர்கள் மட்டுமே பயன்படுத்துவது கூடாது. பிற கட்சிகளும், வேட்பாளர்களும், முறையாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆனால் எந்த ஒருகட்சியும், வேட்பாளரும் அவற்றை தேர்தல் அலுவலகம் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர்களும், அதிகாரிகளும் எந்த வடிவத்திலும் நிதி வழங்வதையோ, வாக்குறுதிகளை வழங்க கூடாது. எந்த ஒரு திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டக் கூடாது. சாலை அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.