தற்போதைய செய்திகள்

மரக்கன்றுகள் வளர்க்க அனைவரும் முன் வர வேண்டும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்…

கரூர்:-

புவி வெப்பமாதலை தடுக்கவும், அதிக அளவு மழை பெறவும் மரக்கன்றுகள் வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெரூர் வடக்கு ஊராட்சி பகுதியில் உள்ள பெரிய காளிபாளையம் மற்றும் சின்னகாளி பாளையம் ஆகிய கிராமங்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலும், அதிக அளவில் மழை பெறுவதற்காகவும் அனைவரும் தங்களால் இயன்றவரையில் மரக்கன்றுகளை வளர்க்க முன்வர வேண்டும். மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை எதிர்கால சந்ததியினருக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

அந்த வகையில் கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்பட்ட நெரூர் வடக்கு ஊராட்சி பகுதியில் உள்ள பெரிய காளிபாளையம் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகத்திற்கு அருகில் உள்ள மந்தை பகுதியில் வாகை, வேம்பு, ஆலமரம், பூவரசு, செணபகப்பூ, நாவல் உள்ளிட்ட 500 மரக்கன்றுகளும், சின்னகாளிபாளையம் பகுதியில் 350 மரக்கன்றுகளும் என மொத்தம் சுமார் 850 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டமாகும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ம.கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் உமாசங்கர், கூட்டுறவு சங்க பிரதிநிதி திருவிக., கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.