தற்போதைய செய்திகள்

மரம் நடுதல், சுற்றுச்சூழலை காப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவுரை

ராமநாதபுரம்:-

மரம் நடுதல், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவுரை வழங்கியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் “சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019-2021” திட்டத்தை துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- 

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனுக்காக சத்துணவு திட்டத்தை செயல்படுத்தினார். அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மா மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கும் திட்டம் உட்பட 14 விதமான பொருட்கள் மற்றும் நலதிட்டங்களை செயல்படுத்தினார். அந்த வகையில் பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக “சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019-2021” துவக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள், வளர்ச்சியில் முன்னுரிமை பெரும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் கல்வித்துறை சார்ந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு 8 குறியீடுகளை இலக்காக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்குறியீடுகளில் ஒன்றான 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் எழுத்தறிவு சதவிகிதத்தை மேம்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கும் பொருட்டு இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுத்திட ஏதுவாக தமிழக அரசு மூலம் ரூ. 6.23 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிறப்பு திட்டமான விலையில்லா மடிகணினி வழங்கும் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 54.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளன. வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் சுமார் 92,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல சுமார் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா காலணிகளுக்கு மாற்றாக ஷூ மற்றும் ஷாக்ஸ்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது மத்திய அரசின் பல்வேறு விருதுகள் தமிழகத்திற்கு குவிந்து வருகின்றது. ஆறுகோடியே இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் செலவில் கல்வியறிவு இல்லாத தமிழகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. மரம் நடுதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்ற பணிகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.ஏ.முனியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் பரமக்குடி சதன்பிரபாகர், திருவாடானை கருணாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா, மாவட்ட கழக அவைத்தலைவர் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஜெயஜோதி, பள்ளிக்கல்வித்துறை பள்ளி சாரா வயதுவந்தோர் கல்வி திட்ட இயக்கத்தின் இயக்குநர் ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.