சிறப்பு செய்திகள்

மரியாதை நிமித்தமாக ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு

சென்னை

ஆளுநரை முதலமைச்சர் 6 மாதங்களுக்கு ஒரு முறையாக சந்தித்து பேசுவது மரபு. அதன் அடிப்படையில்  மாலை 5 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து இப்போது ஆளுநரை முதலமைச்சர் சந்தித்து பேசினார்.

சட்டம், ஒழுங்கு பிரச்சினை, வெளிநாடு சுற்றுப்பயணம் மற்றும் புதிய திட்டங்களை அமல்படுத்துவது ஆகியவை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின்போது தலைமை செயலாளர் க.சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த நவீன கால்நடை பூங்கா குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கால்நடை பூங்கா உலகத்தரத்தில் அமைக்கப்பட உள்ளது. இங்கு ஆடுகள், மாடுகள் மற்றும் கால்நடைகள் குறித்த ஆராய்ச்சிகள் போன்றவை இடம் பெற உள்ளன. மொத்தம் 900 ஏக்கர் நிலத்தில் ரூ.396 கோடி செலவில் இந்த கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த கால்நடை பூங்கா பற்றி திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் க.சண்முகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) தீரஜ்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர் சி.காமராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் ஏ.ஞானசேகரன், மீன்வளத்துறை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.