தற்போதைய செய்திகள்

மழை காலத்தில் மின் தடங்கலை சரி செய்ய உடனடி நடவடிக்கை – மின்துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் பி.தங்கமணி உத்தரவு

சென்னை

மழை காலத்தில் மின் தடங்கலை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் பி.தங்கமணி உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி மின் பகிர்மான பணிகள் குறித்து ஆய்வினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மேற்கொண்டார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், தமிழ்நாடு எரிசக்தித்துறை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஆசியா மரியம், இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு.வினித், மேலாண்மை இயக்குநர், அனைத்து இயக்குநர்கள், அனைத்து தலைமை பொறியாளர்கள் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி, மழைக்காலத்தில் மின் கட்டமைப்பு மேலாண்மை, மின் தடங்கல் மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு பற்றி விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், மழைக்காலத்தில் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் பணிபுரியுமாறும் மற்றும் மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் விரைவாக செயல்பட்டு மின் தடங்கலை உடனுக்குடன் நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு உத்தரவிட்டார்.