தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் அம்மாவின் அரசு துணை நிற்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

திருவாரூர்

மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகையிலும் அம்மாவின் அரசு உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட 50 பள்ளிகளைச் சார்ந்த 5,275 மாணவ, மாணவிகளுக்கு ரூ.19 கோடியே 960 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கி 2019-2020ம் கல்வியாண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் அரசு தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டமானது முதன்முதலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெற வேண்டுமென்ற உயரிய நோக்கில் அம்மா அவர்கள் இத்திட்டத்தை படிப்படியாக விரிவுப்படுத்தினர். அந்த வகையில், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அம்மா வழியில் செயல்படும் அரசானது இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

மாணவ பருவம் என்பது கிடைக்காத பருவம். இப்பருவத்தில் கிடைக்கிற உலக அறிவை அனைத்து மாணவ, மாணவிகளும் பெற வேண்டும் என்பதே ஆசிரியர்கள், பெற்றோர்களின் விருப்பம். மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும். உங்களால் முடியும் என்பதை எண்ணி நன்கு படிக்க வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்களின் வாக்கியங்களை மாணவ, மாணவிகள் வாக்கியமாக எடுத்துக் கொள்ளாமல், வாழ்க்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் விவசாய குடும்பங்களை சார்ந்த மாணவ, மாணவிகள் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் நன்கு கல்வி கற்று எதிர்வரும் பொதுத்தேர்வில் வெற்றிபெற வேண்டும். எல்லா வகையிலும் அம்மா அவர்களின் அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆ.தியாகராஜன், மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் டி.மனோகரன், மன்னார்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவாராஜமாணிக்கம், மன்னார்குடி முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் கா.தமிழ்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.