தற்போதைய செய்திகள்

மாணவர்கள் எதையும் ஆய்வு சிந்தனையுடன் அணுக வேண்டும் – உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுரை….

தருமபுரி:-

மாணவர்கள் எதையும் ஆய்வு சிந்தனையுடன் அணுக வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளி தானப்பகவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மாநில மன்றம் சார்பில் தேசிய கணிதவியல், அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சி பல்வேறு போட்டியில் வெற்றிப்பெற்ற 67 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், பாராட்டுசான்றிதழ்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவிற்கு பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் பி.குழந்தைவேல் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

நமது குழந்தைகள் அறிவியல் சிந்தனைகள் கொண்டவர்களாக வளர்க்கப்பட்டு, அறிவாற்றல் உடையவர்களாக மிளிரவேண்டும் என்பதுதான் அரசின் முக்கிய நோக்கம். தமிழக உயர்கல்வித்துறை சிறப்பான பணிகளை செய்துவருகிறது. கல்வி என்பதன் பொருளே ஆராய்ந்து அறிவதே ஆகும். இதுவே அறிவு இயல் என வகைப்படுத்தப்படுகிறது. அதாவது உண்மையை அறிவதே ஆகும். ஆராய்ச்சியோடு இணைந்த கல்வியே மாணவர்களுக்கு அவசியமாகிறது. ஆய்வு சிந்தனையுடன் எதையும் அணுகும் முறையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு உறுதுணையாக தேசிய கணித மற்றும் அறிவியல் கண்காட்சிகள் அவசியமாகிறது. தங்கள் அறிவியல் சிந்தனைகளை மற்றவர்களுக்குள் பறிமாற்றம் செய்துக்கொள்ள இதுபோன்ற கண்காட்சிகள், பல்வேறு போட்டிகள் பயனுள்ளதாக அமையும்.

அறிவியல் என்பது நமது அன்றாட வாழ்வோடு இணைந்தது. மாணவ-மாணவிகள் அறிவியல் ஆய்வுகளில் இளம்வயது முதலே ஈடுபடவேண்டும். இவ்வாறு ஈடுபடும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஊக்கமளிக்க வேண்டும். தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மன்றம் பல்வேறு அறிவியல் தொழிற்நுட்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மன்றம் தமிழக உயர்கல்வித்துறையின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அறிவியல் தொழிற்நுட்ப பயன்களை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துச்செல்வதோடு, அறிவியல் குறித்த விழிப்புணர்வை இந்த மன்றம் ஏற்படுத்திவருகிறது.

மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழிற்நுட்பக் குழு மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மன்றம் இணைந்து அறிவியல் திருவிழாக்களை நடத்திவருகிறது. கணித மேதை சீனிவாராமானும் அவர்கள் பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 22-ம் தேதியை தேசிய கணித தினமாக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவர்கள் மீது கணிதப்பாடத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் அதைச்சார்ந்த நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மன்றம் நடத்தி வருகிறது.

அறிவியல் மேதை சர்.சி.வி.ராமன் நிகழ்த்திய அறிவியல் பரிசோதனை விளைவாக நிகழ்ந்த ராமன் விளைவு என்ற கண்டுப்பிடிப்பை கொண்டாடும் விதமாக தேசிய அறிவியல் தின விழாவும் பிப்ரவரி 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அறிவியலின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் அறிவியல் தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ‘மக்களுக்கான அறிவியல்…அறிவிலார்ந்த மக்கள்” என்ற தலைப்பில் பல்வேறு அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அறிவியலில் சிறந்தவர்களாக தொன்றுதொட்டே விளங்கிவந்தனர். இதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளது.

இலக்கியம் என்பது பொழுதுபோக்கிற்கு அல்ல, வாழ்க்கைக்கு என உணர்த்த வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சியை முறைப்படுத்தியது மற்றும் பயன்படுத்தியதன் விளைவாக மேற்கிந்திய நாடுகள் இன்று தொழிற்துறையிலும், சமூக பொருளாதார முன்னேற்றத்திலும் நம்மைவிட சிறந்த நிலையை அடைந்துள்ளனர்.
எனவே நாமும், சமகால அறிவியல் தொழிற்நுட்பத்தை பரவலாக்குவதன் மூலம் குறிப்பாக பள்ளி மாணவர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் அறிவியல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நமது நாடு அறிவியலில் சிறந்த நிலையை அடையமுடியும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் செயல் உறுப்பினர் முனைவர்.சினீவாசன், சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர்.எ.அப்துல் ரஹ்மான், பள்ளி தாளாளர்ஏ.மல்லிகா அன்பழகன், பள்ளி முதன்மை நிர்வாக அலுவலர் ஏ.வித்யா ரவிசங்கர், மாவட்ட பிரதிநிதி பொண்ணுவேல், கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ், ஜிம் முருகன் ,பள்ளி முதல்வர் தீபா சுப்பிரமணியன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.