தற்போதைய செய்திகள்

மாணவர்கள் நன்றாக படித்து வீட்டுக்கும் நாட்டிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அறிவுரை

திண்டுக்கல்

மாணவர்கள் நன்றாக படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

திண்டுக்கல் எம்.எஸ்.பி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் 562 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் பொதுமக்களின் தேவையை அறிந்து, கோரிக்கைக்கு முன்பாகவே திட்டங்களை அறிவித்து தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்களின் மூலம் மாணவ, மாணவிகள் தரமான கல்வியை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசால் தற்சமயம் கல்வி கற்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், பள்ளி கல்வித்துறையில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு பள்ளிக்கல்வித்துறைக்கென தமிழக அரசின் 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,841 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மாணவ, மாணவிகள் இன்றைய நவீன உலகில் நடைமுறையில் உள்ள உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு, தங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகள் அவர்களின் திறமையை வளர்த்து தங்களது தகுதியை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது நிலையையும், தங்களின் குடும்ப சூழ்நிலையையும் மேம்பாடு அடைய செய்ய முடியும். அதற்கு அடிப்படையாக அமைவது, என்றும் அழியா சொத்தான கல்வியே ஆகும்.

ஆகவே மாணவ, மாணவிகள் தரமான கல்வியை பெறுவதற்கு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, பள்ளி கல்வித்துறையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கல்வி உதவித்தொகை, மதிய உணவு, புத்தகப்பை, காலணிகள், புவியியல் வரைபடம், வண்ணப் பென்சில்கள், கிரையான்ஸ் உட்பட கற்றலுக்குத் தேவையான 14 வகையான கல்வி உபகரணங்கள் அனைத்தையும் பாகுபாடின்றி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறது.

குறிப்பாக, கிராமப்புறங்களில் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கு செல்ல ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் திட்டம், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுபோன்று தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்கால நலனையும், குடும்பத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, நல்ல முறையில் கல்வி கற்று வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.