தற்போதைய செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு அம்மா அரசு உறுதுணையாக இருக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு…

திருவாரூர்:-

மாணவ-மாணவிகளுக்கு அம்மா அரசு உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் பேசி உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3113 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 27 ஆயிரத்து 252 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

சாதாரண மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா. மாணவ பருவம் என்பது கிடைக்காத பருவம், இப்பருவத்தில் கிடைக்கிற உலக அறிவை அனைத்து மாணவ,மாணவிகளும் பெற வேண்டும் என்பதே ஆசிரியர்கள், பெற்றோர்களின் விருப்பம்.

மாணவ,மாணவிகள் வாழ்க்கையில் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும். உங்களால் முடியும் என்பதை எண்ணி நன்கு படிக்க வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்களின் அறிவுரைகளை மாணவ,மாணவிகள் வாக்கியமாக எடுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரட்சித்தலைவி அம்மா அரசால் இவ்வாண்டு பள்ளிகல்விக்காக மட்டும் ரூ.28 ஆயிரத்து 588 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டதில், மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 4 பள்ளிகளை சேர்ந்த 3113 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 27 ஆயிரத்து 252 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் நன்கு கல்வி கற்று எதிர்வரும் பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். எல்லா வகையிலும் அம்மா அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் பொன்வாசுகி ராமன், மன்னார்குடி நகர்மன்ற முன்னாள் தலைவர் சுதா அன்புச்செல்வன், கோட்டூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஜீவானந்தம், மன்னார்குடி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் தமிழ்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.