தற்போதைய செய்திகள்

மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

திருவள்ளூர்

மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆவடி மாநகராட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை மாநகராட்சி சார்பில் குப்பைகள் அகற்றும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதன்படி நேற்று ஆவடி ஜேபி எஸ்டேட் பகுதியில் தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் க.பாண்டியராஜன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் மோகன், மாநகராட்சி பொறியாளர் உள்பட 700-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள், பொதுமக்கள், கல்லூரி இளைஞர்கள் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர் சுமார் 1 மணி நேரம் குப்பை அள்ளுவதை பார்த்த அப்பகுதி மக்களும் தாமாக முன் வந்து சுத்தம் செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நிர்வாகத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இப்போது உள்ள தமிழ் சமுதாயம் ஒரு சுய சிந்தனையோடு தங்களை வழிபடுத்தக்கூடிய சமுதாயமாக உள்ளது.

காவல்துறை தனது பணியை செவ்வனே செய்து வருவதால் குற்ற விகிதம் மிக குறைவாக உள்ளது. அடுத்த வருடமும் நாங்கள் தான் வருவோம். இதை கூறியது ஒரு அமைப்பு மட்டும் கிடையாது. மூன்று அமைப்புகள் தனித்தனியாக ஆய்வு செய்து மூன்றுமே தமிழகம் தான் முதலிடம் என கூறி இருக்கிறது. அதை நம்பாமல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் குறை கூறி வருகிறார்.

ஆவடி திமுகவினர் ஆட்சிக் காலத்தில் எப்படி இருந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இது போல ஒவ்வொரு இடத்திலும் செய்வதால்தான் தமிழகம் ஆளுமை தன்மையில் முதல் இடமாக விளங்குகிறது. இப்போது ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.