தற்போதைய செய்திகள்

மாநில கூட்டுறவு வேளாண்மை வங்கி 9 ஆண்டுகளாக லாபம் ஈட்டி சாதனை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்…

சென்னை:-

மாநில கூட்டுறவு வேளாண்மை வங்கி கடந்த 9 ஆண்டுகளாக லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரப் பயன்பாடு, வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு பெட்டக வசதி மற்றும் நவீன மயமாக்கப்பட்ட நகைக்கடன் கிளை ஆகியவற்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, சென்னை மயிலாப்பூரிலுள்ள, தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரப் பயன்பாடு, வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு பெட்டக வசதி மற்றும் நவீன மயமாக்கப்பட்ட நகைக்கடன் கிளை ஆகியவற்றை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தலைமை நிறுவனமாக தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செயல்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் 19 மண்டல அலுவலகங்களையும், 7 நகைக்கடன் கிளைகளையும் கொண்டுள்ள இந்த வங்கி, கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. நடப்பாண்டில் 31.01.2019 வரை ரூ.18.27 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

மின்கட்டண செலவை கட்டுப்படுத்தவும், மின்சாரத்தை சேமிக்கவும் 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் இந்த வங்கியில் நிறுவப்பட்டு இன்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. நாளொன்றுக்கு 40 யூனிட்டுகள் வீதம் மாதம் ஒன்றுக்கு 1200 யூனிட்டுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப் பட்டுள்ளது. ரூ.4,62,000 மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த சூரிய சக்தி அலகு மூலம் ஆண்டொன்றுக்கு 14,600 யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும். அதேபோல, ரூ.2,28,196 மதிப்பீட்டில் 51 அறைகளை கொண்ட பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதி மக்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு பெட்டக சேவையை அளிக்க முடியும்.

மேலும், நகைக்கடன் கிளையின் அலுவலகம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 1500 சதுர அடி பரப்புக்கு விரிவாக்கம் செய்து நவீனமயமாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் விவசாய நகைக்கடன்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியும் ஆண்டொன்றுக்கு ரூ.5 கோடி விவசாய நகைக்கடன் வழங்கினால் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் விவசாய நகைக்கடனாக மட்டும் இந்த வங்கிகள் மூலம் வழங்க முடியும். இதன் மூலம் 180 தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளும் தொடர்ந்து லாபத்தில் இயங்கும் நிலை ஏற்படும்.

எதிர்காலத்தில் சிறுவணிக கடன், மகளிர் கடன், சுய உதவிக்குழுக்கள் கடன், வீட்டு அடமான கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், விவசாய கருவிகள் வாங்க கடன், கிராமப்புற வீட்டு வசதிக் கடன் மற்றும் சூரிய மின் கட்டமைப்பு கடன் என பல புதிய திட்டங்கள் இந்த வங்கிகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாநகராட்சி பள்ளி குழந்தைகள் 40 பேருக்கு சீருடைகளையும், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டக சாவிகளையும், நிரந்தர வைப்புக்கான ரசீதுகளையும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முனைவர் இரா.பழனிசாமி, கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கு.கோவிந்தராஜ், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நட்ராஜ், கூடுதல் பதிவாளர்கள் முனைவர் க.ராஜேந்திரன், ஆர்.ஜி.சக்தி சரவணன், பா.பாலமுருகன், ஆ.ராமலிங்கம், வெ.லட்சுமி, டி.அமலதாஸ், கோ.செந்தில்குமார், மீராபாய் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.