சிறப்பு செய்திகள்

மானிய விலை ஸ்கூட்டர்’’ அம்மாவுக்கு பிரதமர் புகழாரம்

தமிழ்நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் ‘அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ அறிமுக விழாவில் பிரதமர் மோடி நேற்று பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்றும் இன்றும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட மோடி, மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வரவேற்றார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் கலைவாணர் அரங்கத்துக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க கலைவாணர் அரங்க வளாகத்தில் செண்டை மேளம் உள்ளிட்ட கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தனர். பிரதமர் காரில் வந்த வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கையசைத்து வரவேற்றனர்.

கலைவாணர் அரங்க வளாகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் நினைவாக 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் தொடங்கிவைத்த பிரதமர் மோடி மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார்.

அதன்பின் அங்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற “அம்மா ஸ்கூட்டர் திட்டம்” தொடக்க விழாவில் மோடி பங்கேற்றார்.

துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை உரையாற்றினார்.

இவ்விழாவில் 5 பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கி, இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி விழா மேடையில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மாவின் இந்த கனவுத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுவதோடு, இத்திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பாராட்டு தெரிவித்தார்.

காலை 11.10 மணிக்கு புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவச் சிலையை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் திறந்து வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த கழகத் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது இணைந்து கரங்களால் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது புரட்சித்
தலைவி அம்மா” நாளிதழை வெளியிட்டனர்.

தொடர்ந்து அம்மாவின் திருவுருவச்சிலையை வடித்துக்கொடுத்த சிற்பி ஏ.பிரசாத்துக்கு, கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பொன்னாடை போர்த்தியும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மோதிரம் அணிவித்தும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

அதன் பிறகு அம்மா பிறந்த நாளை குறிக்கும் வகையில் 70 அடி நீளத்தில் கேக் தயாரிக்கப்பட்டு இருந்தது. அந்த கேக் வெட்டப்பட்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. கழகத்தின் பல்வேறு அணிகள் சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளையொட்டி தலைமைக் கழகத்தின் நுழைவு வாயிலில் வாழை மரம், தென்னை ஓலை, பழங்களை கொண்டு அலங்கார வளைவு, தோரணம் அமைக்கப்பட்டிருந்தது.

தலைமைக் கழக அலுவலகத்தை சுற்றி அம்மாவின் புகழைப் போற்றி வண்ணப்பதாகைகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வழிநெடுக கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.