தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கழக ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் நிறைவேற்றம் – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்

நாமக்கல்:-

மாற்றுத் திறனாளிகளுக்காக கழக ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அமைச்சர் பி.தங்கமணி பெருமிதத்துடன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மதிப்பீடு முகாம் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சரின் சமூகப் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விபத்து மரண உதவித்தொகையாக 1 நபரின் குடும்பத்தாருக்கு ரூ.1,02,500-க்கான காசோலை, இயற்கை மரண உதவித்தொகையாக 2 நபர்களின் குடும்பதாருக்கு தலா ரூ.22,500–க்கான காசோலை, 3 நபர்களுக்கு தற்காலிக உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 9 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 12 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 2 நபர்களுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை,

1 நபருக்கு முதிர்கன்னி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை என மொத்தம் 30 நபர்களுக்கு ரூ.1,72,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் முதலமைச்சரின் கிராமப்புற வீட்டுக் காய்கறி உற்பத்தித்திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைகளையும் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சருமான மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அம்மாtpன் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, மனநலன் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கும் திட்டம் உட்பட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய அரசு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு சென்று மாற்றுத்திறன் சதவிகிதம் குறித்து மருத்துவர்களால் மதிப்பீடு செய்து அட்டை பெற வேண்டும்.

அதனடிப்படையில் நலத்திட்ட உதவிகள் பெற இயலும். மருத்துவர்கள் மதிப்பீடு செய்வதற்காக பல மாற்றுத்திறனாளிகளால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வரமுடியாத சூழல் உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் மாற்றுத்திறனாளிகள் எவரும் விடுப்படக்கூடாது என்பதற்காக, 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதனடிப்படையில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகின்றது.

இந்த முகாமில் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து வருகின்றார்கள். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் எவரேனும் இருந்தால் அவர்களை சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாமிற்கு அழைத்து வந்து அரசு நலத்திட்ட உதவிகளை பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.