சிறப்பு செய்திகள்

மின்தடை புகார் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் பி.தங்கமணி உறுதி

சென்னை

மின்தடை புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி உறுதி அளித்தார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மின்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், இணை மேலாண் இயக்குனர் டாக்டர் எஸ்.வினித், மற்றும் இயக்குநர்கள் உடன் இருந்தனர்.

இந்த கலந்தாய்வில் வடகிழக்கு பருவமழையின் போது தமிழ்நாடு மின்வாரியம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகளை அமைச்சர் வழங்கினார். மேலும், பருவமழையின் போது மின்தடை பற்றிய புகார்கள், மின்நுகர்வோர்களின் குறைகள் ஆகியவற்றை நீக்கும் பொருட்டும் மற்றும் மின் விபத்து ஏற்படா வண்ணம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

மேலும், இந்த பருவமழையின் போது தமிழ்நாட்டிலுள்ள மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின்தடை புகார்களை ஏற்கனவே இயங்கிவரும் மின்தடை புகார் எண்ணான 1912 என்ற எண்ணுடன், மின்வாரிய தலைவர் புகார் மைய  எண்களான 044-28524422 மற்றும் 044-28521109 மற்றும் வாட்ஸ்அப் எண்ணான 9445850811 மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் காம் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 044-24959525 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும் தடையின்றி தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம் என்றும், அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேற்கூறிய மின் குறைதீர்க்கும் எண்கள் மின்சார வாரிய வலைத்தளத்திலும் www.tangedco.gov.in வெளியிடப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.