தமிழகம்

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை

சூறைக் காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்று (நேற்று) காலை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 3 தினங்களில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் கடலோர மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு காற்று மாசு வராது.

காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நாளை (இன்று) அந்தமான் கடல் பகுதிகளுக்கும், 6, 7, 8 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

மகா புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளதால் 6-ந் தேதி (நாளை) இரவோ, 7-ந் தேதி அதிகாலையிலோ குஜராத் மாநிலம் போர்பந்தர் – தியோ இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டெல்லியில் ஏற்பட்டுள்ளது போல சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை. தற்போது காணப்படுவது பனிப்புகை மட்டுமே. இது வெயில் வந்ததும் கரைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.