மதுரை

மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

மதுரை:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தீபாவளி முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலக பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாது, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வதால், இக்கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இங்கு வருவோருக்கு பிரசாதமாக லட்டு வழங்க வேண்டுமென பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருப்பதியில் பிரசாதமாக லட்டு வழங்கி வருவதை போன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வரும் தீபாவளி முதல் தினந்தோறும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும் என  கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் கரு.முத்துகண்ணன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தேர்வு செய்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனிடையே கோவில் நிர்வாகம் கொண்டு வந்த இந்த புதிய திட்டமும் கோவிலுக்கு மேலும் பெருமையை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.