சிறப்பு செய்திகள்

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.387.60 கோடி மதிப்பில் புதிய கதவணை – முதலமைச்சர் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 19.2.2019 அன்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பு மேலணையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 387 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை அமைக்கும் பணி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கொம்பு மேலணையின் கொள்ளிடம் கதவணை மேலும் பாதிக்கப்படா வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு 38 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்துதல், ஆகிய பணிகளுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் 240 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 532 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்த அரசின் செய்திக்குறிப்பு வருமாறு;-

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வாத்தலை கிராமம் மற்றும் ஸ்ரீரங்கம் வட்டம், எலமனூர் கிராமங்களின் இடையே முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 387 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை அமைக்கும் பணி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கொம்பு மேலணையின் கொள்ளிடம் கதவணை மேலும் பாதிக்கப்படா வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு 38 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைவு பலகை (Sheet Pile), தெற்கு கொள்ளிடம் கதவணையில் கீழ்புறம் கூடுதல் கசிவில்லாச்சுவர் (Cutoff Wall) மற்றும் காப்பணை (Coffer dam) அமைத்து பலப்படுத்தும் பணி ஆகிய பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இப்பணிகளை நிறைவேற்றுவதன் மூலம், திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள புள்ளம்பாடி, பெருவாளை மற்றும் அய்யன் வாய்க்கால்கள் வாயிலாக 56,953 ஏக்கர் நிலங்களின் பாசனவசதி உறுதி செய்யப்படுவதோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 12,01,507 ஏக்கர் பரப்பிலான காவேரி டெல்டா பாசன வசதிகள் உறுதி செய்யப்படும்.

மேலும், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கப்பட்ட பேராம்பட்டு அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், செய்யாற்றின் குறுக்கே 7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு,

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கடிலம் ஆற்றின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை; கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், குடகனாற்றின் குறுக்கே 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை; திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், நல்லாற்றின் குறுக்கே 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், உப்பாற்றின் குறுக்கே 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை;

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 9 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், உப்போடையின் குறுக்கே 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை;கடலூர் மாவட்டம் – கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டங்களில் 2 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து சீரமைக்கப்பட்ட வெள்ளப்பாக்கம் கால்வாய், சிதம்பரம் வட்டத்தில் பாசிமுத்தான் ஓடை, தில்லையம்மன் ஓடை, ஓமக்குளம் வடிகால், கான்சாகிப் கால்வாய் மற்றும் முத்தையா பிள்ளை உபரி ஆகியவற்றில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ளத் தணிப்பு பணிகள், சிதம்பரம் வட்டம், காட்டுமன்னார் கோயிலில் மணவாய்க்கால் மற்றும் பழைய கொள்ளிடத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ள சேதங்களை சீரமைக்கும் பணிகள்; காஞ்சிபுரம் மாவட்டம் – வெள்ளத்தினால் சேதமடைந்த அடையாறு மற்றும் வேகவதி ஆறுகளின் கரைப் பகுதிகளை 23 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து புதுப்பிக்கும் பணிகள்.

விழுப்புரம் மாவட்டம் – விழுப்புரம் வட்டம், கோலியனூர் கால்வாயில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள்; நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம் வட்டம், நாட்டார் மங்களம் வடிகாலின் குறுக்கே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட நீரொழுங்கி; சென்னை – தரமணியில் பொதுப்பணித் துறை வளாகத்தில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (துஐஊஹ) உதவியுடன் 1 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைகீழ் நீர்த்தேக்கத் தொட்டி.

சென்னை – தண்டையார்பேட்டை வட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இருவழிப் பாலம்; திண்டுக்கல் மாவட்டம் – பழனி வட்டம், மாட்டுமந்தை அருகில் பாலாற்றின் குறுக்கே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைப் பாலம்; காஞ்சிபுரம் மாவட்டம் – செய்யூர் வட்டம், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 9 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மறுகட்டுமானம் செய்யப்பட்ட ஒருவழிப் பாலம்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், செங்கன்பசுவன்தலாவ் ஏரியிலிருந்து பிற ஏரிகளுக்கு வெள்ள உபரி நீரை கொண்டு செல்ல 10 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வரத்து கால்வாய்; திருவள்ளூர் மாவட்டம் – மாதவரம் வட்டம், எண்ணூர் முதல் எர்ணாவூர் குப்பம் வரை கடலரிப்பை தடுப்பதற்காக 31 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 9 தொடர் தூண்டில் வளைவுகள்; திருநெல்வேலி மாவட்டம் – பாளையங்கோட்டை வட்டம், திடியூர் கிராமத்திலிருந்து பச்சையாறு வழிந்தோடிக்கு கீழ்புறம் சாலையின் வலதுபுறத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் என மொத்தம் 240 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத் துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டத்தின் மூன்றாம் நிலையின் கீழ் 197 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 18 தொகுப்பு வெள்ள நீர் கால்வாய் அமைக்கும் பணிகள்; திருநெல்வேலி மாவட்டம் – அம்பாசமுத்திரம் வட்டம், எலுமிச்சையாற்றின் குறுக்கே 1 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள படுகை அணை; திருவண்ணாமலை மாவட்டம் – ஆரணி வட்டம், நாகநதி ஆற்றின் குறுக்கே 3 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அணைக்கட்டு,

கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 192 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 27 தடுப்பணைகள், சேலம் மாவட்டம் – ஓமலூர் வட்டம், சரபங்கா உப வடிநில பகுதியில் 9 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 7 ஏரிகளை புனரமைத்தல் மற்றும் 7 நிலத்தடிநீர் செறிவூட்டும் கிணறுகளை அமைக்கும் பணிகள்; கடலூர் மாவட்டம் – சிதம்பரம் வட்டம், கிள்ளை அருகில் சேதமடைந்த வெள்ளாற்றின் கரை பகுதியில் 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்காலிக மறுசீரமைப்பு பணிகள், வேலூர் மாவட்டம் – ஆண்டியப்பனூர் ஓடை அணையில் 4 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பூங்கா.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – அடையாறு ஆறு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – செம்பரம்பாக்கம் ஏரி, தேனி மாவட்டம் – மீறுசமுத்திரம் கண்மாய், திருவள்ளூர் மாவட்டம் – செங்குன்றம் ஏரி, பூண்டி ஏரி ஆகிய ஏரிகளில் 124 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகள் என மொத்தம் 532 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத்துறையின் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சீ.வளர்மதி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நீர்வள ஆதாரத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் (பொது) எம்.பக்தவத்சலம், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டடம்) எஸ்.மனோகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.