தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட ஆய்வு புத்தகம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார்…

சென்னை:-

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உலக வங்கியுடன் இணைந்து எழுதப்பட்ட முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் “Nuts and Bolts of Chief Minister’s Comprehensive Health Insurance Scheme” என்கின்ற ஆய்வு புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த பதிப்பு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகளை விளக்குகிறது. இத்திட்டத்தில் இதுவரை 34.53 லட்சம் பயனாளிகள் ரூ. 5667 கோடி செலவில் பயன் பெற்றுள்ளனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 12.11 லட்சம் பயனாளிகள் ரூ. 2025 கோடி செலவில் பயன் பெற்றுள்ளனர்.

இந்த திட்டத்தின் செயல்பாடுகள் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விட மேன்மையாகவும் தனித்துவம் வாய்ந்ததாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் மற்ற மாநிலங்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் கூட முன்னுதாரணமாக இருக்கும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதத்திற்காகவும் மற்றும் உடன் இணைத்ததற்காகவும் உலக வங்கியால் மிகவும் பாராட்டப்பட்டது.

உலக வங்கி அதிகாரிகள் இத்திட்டம் மக்களிடம் சென்றடையும் விதத்திற்காக மிகவும் பாராட்டினர். மேலும் மக்கள் இந்த கட்டணமில்லா மருத்துவ சேவையை பயன்படுத்துமாறு அமைச்சர் வலியுறுத்தினார். இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் சுகாதார துறைக்கும் காப்பீடு நிறுவனத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் நாகராஜன், கூடுதல் இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், உலக வங்கியின் மூத்த சுகாதார நிபுணர் ஷீனா சாப்ரா, பொருளாதார நிபுணர் ஓவன்ஸ்மித், சுகாதார நிபுணர் செல்வி ரிபாட் ஹாசன், இயக்க அதிகாரி ராகுல் பாண்டே, யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவன அதிகாரிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.