தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்திய அரசு மருத்துவமனை டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் ெபற்றுக் கொண்டு நேற்று முதல் பணிக்கு திரும்பினார்கள். இதையடுத்து முதலமைச்சர் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்கள் மீது நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தம் செய்து வந்தனர். அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்றும், உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்தினம் கேட்டுக் கொண்டார்.

அங்கீகரிக்கப்படாத டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் இதுபோன்ற செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது என்றும், அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்றும் எச்சரித்தார். இதனைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் அனைவரும் நேற்று முன்தினமே பணிக்கு திரும்பினர்். அங்கீகரிக்கப்படாத சங்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. முதல்வரின் வேண்டுகோளை எற்று அவர்களும் வேலைக்கு திரும்பினர். அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று 1.11.2019 அன்று காலை பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.முதலமைச்சரின் ஆணைப்படி அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பணிமுறிவு உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. முதலமைச்சர் உறுதியளித்தபடி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அம்மாவின் அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.