சிறப்பு செய்திகள்

முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் – எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்குகிறது

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கிறது. இதற்கான விழா இன்று பிற்பகல் வெகு கோலாகலமாக நடைபெறுகிறது.

சிறந்த சேவை செய்ததற்காகவும், மக்கள் நலத்திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தியதற்காகவும் இந்த டாக்டர் பட்டத்தை டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கி கவுரவிக்கிறது. இதற்கான விழா வேலப்பன்சாவடியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் பல்வேறு கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 4 முறை சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2011-ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது அதில் எடப்பாடி கே.பழனிசாமி அமைச்சராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு இரண்டாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியபோதும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடப்பாடி கே.பழனிசாமியை அமைச்சராக்கினார்.

2016 டிசம்பர் மாதம் 5-ந்தேதி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலமானார். அதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது ஆட்சித்திறன், அவரது செயல்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கு எடுத்து வரும் முயற்சிகள், தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதல்நிலை மாநிலமாக மாற்றுவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அதற்காக அவர் வெளிநாடுகள் சென்று தொழில் முனைவோர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது போன்றவற்றை பாராட்டியும், தமிழக மக்களுக்கு அவர் ஆற்றி வரும் அரிய சேவையை பாராட்டியும் முதமைச்சருக்கு டாக்டர் பட்டம் வழங்க டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் குழு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகம் மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்துள்ளதை தொடர்ந்து கழகத்தினர் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால் வேலப்பன்சாவடியில் வழிநெடுக கழக கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு சாலையின் இரு புறமும் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்பதற்கு மாவட்ட கழகம் ஏற்பாடு செய்துள்ளது. விழாவில் அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.