தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி -வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு பரிசு : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்…

நாகப்பட்டினம்:-

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுவிழாவில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்-நிறைவு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

விழாவில் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-

புரட்சித் தலைவி அம்மா அவர்களது ஆணையின்படி, “முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்” 2013-14-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செய்யும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழக அரசால் ஆண்டுதோறும் ரூ.8 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவு விளையாட்டுப் போட்டிகள் 21 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் தடகளம், கூடைப்பந்து, கபாடி, கையுந்துபந்து, நீச்சல், மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், கைப்பந்து மற்றும் பூப்பந்து ஆகிய 10 விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு, முதல் பரிசாக ரூ.1000.00, இரண்டாம் பரிசாக ரூ.750.00, மூன்றாம் பரிசாக ரூ.500.00 வீதமும் மொத்தம் 567 நபர்களுக்கு ரூ. 4,25,250 வழங்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மாநில அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் 830 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூபாய் நான்கு கோடியே ஐம்பத்தி ஒன்பது லட்சம் வழங்கப்படவுள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டியில் நமது மாவட்டத்தைச் சார்ந்த கூடைப்பந்து மகளிர் அணியினர் முதலிடம் பெற்று ரூ.12,00,000 பரிசுத் தொகை பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வேறு எந்த மாநிலத்திலும் வழங்கப்படாத வகையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2.00 கோடியும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.1.00 கோடியும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.50.00 லட்சமும், மேலும் காமன் வெல்த் போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.50.00 லட்சமும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.30.00 லட்சமும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.20.00 லட்சமும், மேலும் தேசிய போட்டிகள் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5.00 லட்சமும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.3.00 லட்சமும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.2.00 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, நீங்கள் அனைவரும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று நமது மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை தேடித் தருமாறு அன்புடன் வாழ்த்துகிறேன்.” என தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவா, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வக்குமார், மாவட்ட கூடைப்பந்து பயிற்றுநர் வடிவேல் முருகன் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தங்ககதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.