சிறப்பு செய்திகள்

முதலமைச்சர் நாளை சூலூரில் பிரச்சாரம்…

கோவை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை  சூலூர் தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை திருப்பரங்குன்றத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது.தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சூலூர் தொகுதியில் நாளை (1-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். திறந்தவேனில் நின்றபடி கழக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் கோவை வருகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிப்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

தொடர்ந்து செஞ்சேரி மலை, சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு ஆகிய 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார். பின்னர் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். மீண்டும் வருகிற 14-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சூலூர் தொகுதியில் 2-வது கட்டமாக பிரசாரம் செய்கிறார். 5-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், 6-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 7-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும், 11-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 12-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும், 13-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும் முதலமைச்சர் கழக வேட்பாளர்களை ஆதரித்து கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.

இதேபோல் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றத்தில் நாளை கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து கிராமம் கிராமமாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்கிறார். 5-ந்தேதி சூலூர் தொகுதியில் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்தும், 7-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியில் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்தும், 9-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியில் கழக வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்தும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.