தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் பிரச்சாரம் செய்யும் இடங்கள் : அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருநெல்வேலி

நாங்குநேரி தொகுதியில் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கும் இடங்களை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க இருக்கின்றனர். நாங்குநேரியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 13, 14 மற்றும் 17-ந் தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் இடங்களை கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, வி.எம்.ராஜலட்சுமி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளர் பிரபாகரன், அம்பை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன், சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பாபு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தமிழக முதல்வர் பேசும்பகுதி, பொதுமக்கள் கூடும் பகுதிகள், மின்வசதி ஏற்பாடுகள் உட்பட ஏற்பாடுகளை அமைச்சர்கள் கேட்டறிந்தனர். களக்காடு ஒன்றியத்திற்கு வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.