நாமக்கல்

முதியோருக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள் – அமைச்சர் வெ.சரோஜா வேண்டுகோள்…

நாமக்கல்:-

முதியோருக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று அமைச்சர் வெ.சரோஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தில் நடைபெற்ற மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் துணைக் கோட்ட அலுவலகம் திறப்பு விழாவில் கழக மகளிர் அணி இணைச்செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா பேசியதாவது:-

மோகனூர் சேலம் சர்க்கரை ஆலை விவசாயிகள், கரும்பு உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உதவியாக உள்ளது. அம்மாவின் அரசு கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கரும்பு உற்பத்தியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலையின் திறனை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குடிமராமத்து பணிக்கு முதலமைச்சர் ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் வேளாண் விளைப்பொருட்களின் உற்பத்தியை பெருக்கி அதிகமான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். வேளாண் உற்பத்தியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து 4 முறை கிரிஷிகர்மான் விருதை பெற்று வருகின்றது. அம்மாவின் அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இன்றைய தினம் முதியோர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளுக்கு எதிரான தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நம் குடும்பத்தில் உள்ள முதியோர்களை மதித்து போற்ற வேண்டும். ஹெல்ப் ஏஜ் என்ற பெயரிலான தொண்டு நிறுவனம் தனது ஆய்வில் 21 சதவிகித இளைஞர்கள் பெரியோர்களை மதிக்கவில்லை என்ற தகவலையும், 53 சதவிகித பெற்றோர்கள் மகன்களால் மன உளைச்சல் அடைகிறார்கள் என்றும், 23 சதவிகித பெரியவர்கள் மருமகள்களால் மனஉளைச்சல் அடைகின்றார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

அம்மாவின் அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 58 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகங்களில் தலா 25 முதியோர்களும், தலா 25 குழந்தைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக குழந்தைகளின் அன்பிற்கு ஏங்கும் முதியோர்களுக்கு குழந்தைகளை கொஞ்சவும், பராமரிக்கவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் மற்றும் முதியோர்களின் அன்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.

நாம் ஒவ்வொருவரும் நம் தாய், தந்தையர், தாத்தா, பாட்டி உள்ளிட்ட முதியோர்களை மதித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். முதுமை காரணமாகவும், அதனால் முதியோர்களுக்கு ஏற்படும் தடுமாற்றங்களையும் சீர்செய்ய, அவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அப்போது தான் நாமும் பிற்காலத்தில் முதியவர்களாகும் போது நமது குழந்தைகள் நமக்கு உதவி செய்வார்கள்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தெரிவித்தார்.