தற்போதைய செய்திகள்

முதியோர்களை பிள்ளைகள்- உறவினர்கள் கைவிட்டாலும் அம்மா அரசு கைவிடாது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரை

முதியோர்களை அவர்களது பிள்ளைகள், உறவினர்கள் கைவிட்டாலும் அம்மாவின் அரசு கைவிடாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 977 பயனாளிகளுக்கு ரூ.2,26,30,338 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ஆலோசனைப்படி துணை முதலமைச்சர் வழங்கியுள்ளார். கல்விச்செல்வமே நாட்டின் செல்வம் என கருதி அம்மாவின் அரசு பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி ஒதுக்கி உள்ளது. தமிழ்நாட்டில் மாதாந்திர உதவித்தொகை 35 லட்சம் பயனாளிகளுக்கு வழங்க ரூ.4300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெரியோர்களை அவர்களது பிள்ளைகள், உறவினர்கள் கைவிட்டாலும் அம்மாவின் அரசு கைவிடாது, கல்லுக்குள் இருக்கும் தேரைக்கு கடவுள் உணவு அளிப்பதுபோல் அம்மாவின் அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் வாழும் அனைத்து பொதுமக்களின் குறைகளையும் கண்டறிந்து அவற்றை சீரிய முறையில் தீர்வு காணும் வகையில் “முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்” என்ற சிறப்பான திட்டத்தினை முதலமைச்சர் தமிழக சட்டமன்ற விதி 110-ன் கீழ் 18.07.2019 அன்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் வார்டுகள் மற்றும் கிராமங்கள்தோறும் மண்டல துணை வட்டாட்சியர் அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் முகாமிட்டு நேரடியாக மனுக்களைப் பெற்று தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலம் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, அவர்களிடமிருந்து மனுக்களை பெற்று தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் தொடர்பு முகாம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தகுதி வாய்ந்த மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்று அந்தந்த கிராமங்களில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட அம்மா திட்ட முகாம் மூலம் 60 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் அரசை தேடி மக்கள் செல்லாமல், மக்களை தேடி அரசு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

முதலமைச்சர் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு 60 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தொடங்கி வைத்துள்ளார். விண்ணப்பம் கொடுத்த பயனாளிகளின் வருமான உச்சவரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்தியும், அரசின் மூலம் வீடு வழங்கப்பட்டால் அந்தவீட்டை சொத்துமதிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பள்ளிக்கல்வியை ஊக்குவிப்பதில் வேறு எந்த மாநிலமும் செய்ய முடியாத சிறந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விலையில்லா மிதிவண்டி, மடிகணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் மாணவ, மாணவிகளுக்கு அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. நிர்வாக ரீதியாக தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடம் பெற்றிருப்பது நமது வரலாற்று பெருமையாகும். மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறந்த முதல்நாளே நோட்டு மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் தொடர்ந்து தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.