இந்தியா மற்றவை

மும்பையில் ரயில் நிலையம் அருகே இருந்த நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு…

மும்பை:-

மும்பையில் ரயில் நிலையம் அருகே இருந்த நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 32பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பையின் எல்பின்ஸ்டன் ரயில் நிலைய மேம்பாலம் இடிந்து விழுந்து 23 பேர் பலியான கோர சம்பவத்தைப் போன்று மற்றொரு சம்பவம் சில மாதங்களில் அரங்கேறியுள்ளது. மும்பையின் மையப்பகுதியான சத்ரபதி சிவாஜி மகராஜா ரயில் நிலையத்தையும், ஆசாத் மைதான் காவல் நிலையத்தையும் இணைக்கும் நடை மேம்பாலம், பழுதாகி இருந்த நிலையில் நேற்று இரவு ஏழரை மணியளவில் அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அலுவலகம் முடிந்து சாலையில் மோட்டார் வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது அந்த பாலத்தின் உடைந்த பகுதி சுமார் 35 அடி உயரத்தில் இருந்து விழுந்தது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கித் தவித்தவர்களை பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்புக் குழுவினர் மீட்டனர். இப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்தனர். இரவு பத்தரை மணி அளவில் முழுமையான அளவுக்கு இடிபாடுகள் அகற்றப்பட்ட பின்னர் காயமடைந்த 32 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் ஜேஜே மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து போது அதன் கீழ் பகுதி சாலையில் இருந்த சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால், உயிர் சேதம் குறைந்ததாக கூறப்படுகிறது. பாலம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளாகி பழுதான நிலையில் அதனை சரிப்படுத்தாமல் ரயில்வே நிர்வாகம் காட்டிய அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று காலையில் கூட அந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதாகவும், நல்ல நிலையில் இருப்பதாக தணிக்கை சான்று அளிக்கப்பட்டு இருந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக மத்திய ரயில்வே அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து உயர்மட்டவிசாரணைக்கு முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். பலியானவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ளார்