இந்தியா மற்றவை

மும்பை ஓஎன்ஜிசி ஆலையில் பெரும் தீ விபத்து : 5 பேர் பலி…

மும்பை:-

மும்பை அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்றுபெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உடல் கருகி பலியாகினர்.

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை அருகே உரானில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஆலையில் கச்சா எண்ணெய் கழிவுகள் சேமித்து வைக்கும் கிணற்றில் தீப்பற்றியது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கும் தீ வேகமாக பரவியது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பகுதி என்பதால் தீ வேகமாக பரவியது. இதையடுத்து தீ பரவாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் எரிவாயு எடுத்துச் செல்லப்படும் குழாய்கள் வேகமாக மூடப்பட்டன.

ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசாரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 3 பேர் காயமடைந்து இருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் டேங்கர்கள் மற்றும் எரிவாயு குழாய்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு விட்டதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.