இந்தியா மற்றவை

மும்பை கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு….

மும்பை:-
மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் டோங்கிரி என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது. சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. நேற்று அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கட்டிட இடிபாடு களை அகற்றி காயம் அடைந்து போராடி கொண்டிருந்தவர்களை மீட்டனர். இன்று அதிகாலை கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் 7 பேர் உடல் மீட்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று மேலும் 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.இடிபாடுகளில் சிக்கியுள்ள 10 பேர் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. இன்றுக்குள் இடிபாடுகள் அனைத்தையும் அகற்றி விடுவோம் என்று பேரிடர் மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர். இதற்கிடையே கட்டிடம் இடிந்தது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அடுக்குமாடி கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.