திருவள்ளூர்

மும்மாரி – திருவள்ளுர் திட்டத்தில் ஏரி,குளங்கள் சீரமைப்பு – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்:-

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் நிறுவன நிதி பங்களிப்புடன் “மும்மாரி – திருவள்ளூர்” முன்முயற்சி திட்டத்தின் மூலம் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்தார்.

திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம், காக்களுர் ஊராட்சிக்குட்பட்ட தாமரைக்குளத்தை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் நிறுவன நிதி பங்களிப்புடன் “மும்மாரி – திருவள்ளூர்” எனும் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

முதலமைச்சரின் கடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவித்ததன் ஆணைக்கிணங்க, மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் ஆகிய நீர் ஆதாரங்களை மாவட்ட நிர்வாகத்துடன் தன்னார்வலர்கள் இணைந்து தூர்வாரி சுத்தப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் முதன் முறையாக காக்களுர் ஊராட்சிக்குட்பட்ட தாமரைக்குளத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் போர்க்வார்னர் என்ற தனியார் நிறுவனமும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு நிதியின் மூலம் பொதுமக்களுடன் இணைந்து தூர்வாரும் பணியினை மேற்கொள்ள இருக்கிறது.

இந்தக் குளத்தினை ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் 5.6 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரி, நீர் சேகரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளது. இந்த குளத்தினைச் சுற்றிலும் வரப்பு போன்று உருவாக்கப்பட்டு அந்த இடங்களில் வெட்டிவேர் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குளத்தின் நடுவே பருத்திப்பட்டு ஏரியில் அமைக்கப்பட்டிருந்தது போல், தூர்வாரப்படும் வண்டல் மண்ணைக்கொண்டு மணல் திட்டுகள் உருவாக்கப்பட்டு, பறவைகள் அமர்ந்து செல்ல ஏதுவாக அமைக்கப்படவுள்ளது. குளத்தின் நீர் உள்வரத்து மற்றும் வெளியேற்றப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைக்காலங்களில் நீர் சேகரிக்கப்பட்டு குளத்தின் நீர்தேக்க கொள்ளளவு அதிகரிக்கப்படும்.

திருவள்ளுர் மாவட்டத்தில் மும்மாரி மழை பொழிய வேண்டும் என்ற நோக்கத்துடன், மாவட்டத்திலுள்ள ஏரிகள், கண்மாய்கள் மற்றும் குளங்கள் ஆகியவற்றை, இதே வேகத்துடன் செயல்பட்டு, சீர்ப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட குடிமராமரத்துப் பணிகள், 62 ஏரிகளில் செயல்படுத்தப்பட்டது. மேலும், இந்த ஆண்டு 30 ஏரிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த குடிமராமத்துப் பணிகள் தொடர முதலமைச்சரால் திருவள்ளூர் மாவட்டத்திற்கும் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், “மும்மாரி – திருவள்ளுர்” – முன் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகள், நிறுவனங்கள் பதிவு செய்து கொள்வதற்கு என இணைய வழி பதிவுவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. https//:mummari.in / registration என்ற இணைப்பின் மூலம் கைபேசி, கணினி வழியே பதிவு செய்து கொள்ளலாம். மேற்கண்ட முன் முயற்சியில் ஈடுபட விரும்புபவர்கள் 9444501111 என்ற கைபேசிக்கு மிஸ்ட் கால் மூலமும் தொடர்பு கொண்டும் பதிவு செய்துக் கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 1000-ம் சதுர அடியில் 300 மரக்கன்றுகளை “மியாவாக்கி” முறைப்படி நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, திட்ட இயக்குநர் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வை.ஜெயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) பா.செந்தூர்பாண்டி, இந்திய-ஜப்பான் நிறுவன தலைவர் சாட்டோ, நிறுவன செயல்தலைவர் விஷ்ணுவர்தன்ராவ் மற்றும் போர்க்வார்னர் நிறுவன பிரநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.