தற்போதைய செய்திகள்

முறைகேடாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் கே.பி.அன்பழகன் எச்சரிக்கை…

தருமபுரி:-

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் எச்சரித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பேளாரஅள்ளியில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆவின் பல்நோக்கு கட்டடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான் தலைமை வகித்தார். தருமபுரி சார் ஆட்சியர் ம.ப.சிவன் அருள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் எ.கோவிந்தசாமி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசின் சார்பில் முதலமைச்சர் உத்தரவின் படி பாலக்கோடு வட்டம் பேளாரஅள்ளி கிராமத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆவின் பல்நோக்கு கட்டடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் அரசு திட்டங்களை மிக சிறப்பாக செயல்படுத்த முடியும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தினந்தோறும் மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக தருமபுரி ஆவின் நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது. கிராமங்களில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையை போக்க நாள்தோறும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 55 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக கூடுதலாக 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் முறைகேடாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வறட்சி காலங்களில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் ஆவின் பொது மேலாளர்(பொ) ஜெயச்சந்திரன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.அரங்கநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், நகர கூட்டுறவு சங்கத்தலைவர் சங்கர், தருமபுரி ஆவின் மேலாளர் முருகவேல், வட்டாட்சியர் ராஜா, பேளாரஅள்ளி ஆவின் தலைவர் அண்ணாமலை, கூட்டுறவு சங்கத்தலைவர் வீரமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.