சிறப்பு செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம் – முதலமைச்சர் உறுதி…

மதுரை:-

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து கோ.புதூரில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றியதாவது:-

நாட்டிற்கு தேவை நிலையான, உறுதியான தலைமை. அந்த தலைமைக்கு பொருத்தமாக கருதப்படுபவர் தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி. அவர் மீண்டும் நாட்டின் பிரதமராக வருவதற்கு மதுரையில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மா வழியில் தற்போது இந்த அரசும் அம்மாவின் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. கழகத்தின் தலைமையிலான மெகா கூட்டணி கொள்கை பிடிப்புள்ள கூட்டணியாகும். இந்த கூட்டணிக்கு கிடைத்துள்ள ஆதரவை கண்டு ஸ்டாலின் மிரண்டு போய், அரண்டு போய் இருக்கிறார். பொதுக்கூட்டங்களில் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் பேசி வருகிறார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் அனைத்து மாநில கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. நரேந்திர மோடி தான் இந்த நாட்டின்பிரதமர் என்று சொல்லி நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஆனால் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் யார் பிரதமர் என்று சொல்ல முடியவில்லை. மக்கள் யாரை நம்பி வாக்களிப்பார்கள். இந்த நிலை தான் அந்த கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்ற தலைவர்கள் எல்லாம் தாங்களும் பிரதமராவதற்கு தகுதி உள்ளவர்கள் என்று கருதுகிறார்கள்.

ஸ்டாலின் ஒருவர் மட்டும் தான் ராகுல்காந்தி அடுத்த பிரதமர் என்று சொல்லி வருகிறார். இப்படிப்பட்ட முரண்பட்ட கருத்துகளுடைய எதிர்க்கட்சிகளால் எப்படி நிலையான ஆட்சியை தர முடியும்.பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். அவரால் மட்டும் தான் வலிமையான ஆட்சியை தர முடியும். தற்போது பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் மோடியால் மட்டும் தான் முடியும்.

தி.மு.க. எங்களைப் பார்த்து மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறி வருகிறார்கள். இதே தி.மு.க.வும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு அக்கட்சியின் மந்திரிசபையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. இவர்கள் கூட்டணி வைத்தால் நல்ல கூட்டணி. நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? இது என்ன நியாயம். அம்மாவின் அரசு சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசாக உள்ளது. ஆண்டு தோறும் ஹஜ் புனித யாத்திரை செல்ல நிதி உதவி வழங்கி வருகிறது. அதேபோல் கிறிஸ்தவ மக்களுக்கு புனித ஜெருசலேம் செல்ல ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கி வருகிறது. புனித ரமலான் நோன்பிற்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்கிய ஒரே அரசு அம்மாவின் அரசு தான்.

இதே தி.மு.க. 15 ஆண்டு காலம் மத்தியில் அமைச்சரவையில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையும் செலுத்தாத தி.மு.க. தங்கள் குடும்ப நலனில் மட்டும் தான் அக்கறை செலுத்தி வந்தது. அது மட்டுமல்லாது இந்த ஆட்சியை கலைக்க தினம் தினம் ஒரு போராட்டத்தை ஸ்டாலின் தூண்டி விடுகிறார். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல்இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்களை எங்களுக்கு எதிராக நடத்தியுள்ளனர். அதையெல்லாம் நாங்கள் தகர்த்தெறிந்து இன்றைக்கு சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகிறோம்.

எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அ.இ.அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. தி.மு.க. எப்போதும் பொய்யான தேர்தல் அறிக்கையைத் தான் கொடுப்பார்கள். இவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினார்கள். யாருக்காவது 2 ஏக்கர் நிலம் கொடுத்திருப்பார்களா? ஆனால் அப்பாவி மக்களின் நிலங்களை அபரித்தார்கள். அம்மா அவர்கள் காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவை தொடங்கி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலங்களை மீட்டுக் கொடுத்தார்.

மதுரையில் 1997-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த லீலாவதி என்ற பெண் தி.மு.க.வின் அராஜகத்தை தட்டிக்கேட்டார். அவரை பெண் என்றும் கூட பாராமல் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்தனர். கொலை செய்த தி.மு.க. பிரமுகரின் சகோதரருடன் இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கைகோர்த்துள்ளார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

சாதி பாட்ஷா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை 

தற்போது நாங்கள் தி.மு.க.வை பற்றி கூறினால் நிறைய உண்மைகள் வெளிவரும். உதாரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்ஷா மர்மமான முறையில் இறந்தார். அவரது நினைவு நாளையொட்டி குடும்பத்தினர் நாளிதழ்களில் கூடா நட்பு கேடாய் முடியும் என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்திருந்தனர். இதைக்கண்டு தி.மு.க.வினர் சாதிக் பாட்ஷா மனைவியின் கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தற்போது சாதிக்பாட்ஷாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவு புகார் கொடுத்துள்ளார். சாதிக் பாட்ஷா மரணம் தொடர்பாக தேர்தல் முடிந்த பிறகு சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும். அது மட்டுமல்லாது அண்ணாநகர் ரமேஷ் கொலை வழக்கு, பால்மலர் கொலை வழக்கு ஆகியவற்றில் உண்மை தோண்டி எடுக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக அம்மா உயர்த்திக் காட்டினார். நாங்கள் 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம். மதுரையை குடிசைகளே இல்லாத நகரமாக உருவாக்கித் தருவோம். எனவே மக்களுக்கு இதுபோன்ற மக்கள் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான் என்கிற செல்வம், த.மா.கா.வை சேர்ந்த ராம்பாபு, பா.ஜ.க.வை சேர்ந்த சசிராமன், தே.மு.தி.க.வை சேர்ந்த கவியரசு, சிவமுத்துக்குமார் மற்றும் கழக கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.