தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது – டாக்டர் ராமதாஸ் கடும் தாக்கு…

காஞ்சிபுரம்:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சட்டம் நீதிமன்றங்கள் சிறைத்துறை மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

இப்பிரச்சார கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

இந்த தேர்தலில் கழக கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட 24 கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி. திருப்போரூர் அ.இ.அ.தி.மு.க.வின் கோட்டையாகும். இந்த பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாக்கு உள்ளது. மரகதம் குமரவேல் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாக மக்கள் பணியாற்றி உள்ளார். எனவே தான் மீண்டும் அவர் போட்டியிடுகிறார். பேரறிஞர் அண்ணா கட்சி தொடங்கிய போது கடமை, கண்ணியம், கட்டுபாடு என்று கொள்கையோடு துவங்கினார். ஆனால் தி.மு.க.வினர் அந்த கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டனர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது. திமுக எதிர்காலம் இந்த தேர்தலோடு முடிவுக்கு வருகிறது.

ஸ்டாலினுக்கு எந்த திறமையும் கிடையாது. ஒரு பெரிய கட்சி தலைமைக்கு ஆளுமை திறனும், தலைமை பண்பும் இருக்க வேண்டும். இந்த தேர்தல் மிகப் பெரிய வெற்றியாக அமையும் அப்போது நான் மீண்டும் இந்த பகுதிக்கு வெற்றி விழாவுக்காக வருவேன். சர்க்கரை ஆலை, சத்துணவு பணியாளர் உட்பட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. அவற்றை தேர்தலில் வெற்றி பெற்றதும் வேட்பாளர்கள் நிறைவேற்றுவார்கள்.திமுக வேட்பாளர்கள் 2 பேரும் டெப்பாசிட் வாங்கக் கூடாது. லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர்கள் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகமும், மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற வேண்டும். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

இப்பிரச்சார கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகி சங்கர்தாஸ், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்டக் கழக துணை செயலாளர் எ.யஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வி.வேலாயுதம், மாவட்ட பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ஜி.ராகவன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் ஏ.விஜயரங்கன், பாட்டாளி மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், மாநில இளைஞர் அணி இணை செயலாளர் சக்கரபாணி பி.வி.கே.வாசு ஆகியோர் உள்பட கழக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.