சிறப்பு செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்..

சென்னை:-

கழக கூட்டணி கட்சித் தலைவர்களை தரம் தாழ்ந்து பேசும் மு.க.ஸ்டாலினுக்கு நாவடக்கம் ேதவை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசும்போதெல்லாம் எடப்பாடி கே.பழனிசாமி கூட்டம் இல்லாத இடங்களில் பேசி வருகிறார் என்று சொல்லி வருகிறார். இங்கு வந்து பார்த்து விட்டு பேசுங்க. எல்லாமே தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. நீங்கள் (மக்கள்) எழுப்புகின்ற ஆர்வமிக்க குரல் ஸ்டாலினின் செவிகளை பிய்த்துக் கொண்டு போகும் அளவுக்கு இருக்க வேண்டும். (மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூக்குரல் இட்டனர்). எங்கள் கூட்டணி பலம் மிக்க கூட்டணி. இது தெரியாமல் நீங்கள் பேசக்கூடாது. மக்கள் சக்தி கொண்ட ஒரே கூட்டணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தான்.

வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள் அனைத்தும் இங்கு ஓரணியாக திரண்டுள்ளது. இதை மறந்துவிட்டு பேசலாமா? அதுமட்டுமல்லாமல் கூட்டணி கட்சி தலைவர்களை ஸ்டாலின் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசை கடுமையாக விமர்சனம் செய்கிறார். அவர் வயது என்ன? அனுபவம் என்ன? இப்படி தரம் கெட்ட வகையில் விமர்சனம் செய்யலாமா? இதுபோன்ற விமர்சனங்களை தான் தி.மு.க. செய்யும். இதனால் மக்கள் மத்தியில் உங்கள் தரம் தாழ்ந்து வருகிறது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஸ்டாலினுக்கு நாவடக்கம் வேண்டும். எல்லா கட்சியிலும் தலைவர்கள் இருக்கிறார்கள்.

இப்படி யாராவது பேசுகிறார்களா? ஸ்டாலின் தான் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார். இந்த தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சி தலைவர்களின் பேச்சை கேளுங்கள். இவரது பேச்சு மட்டும் தான் தரம் கெட்ட வகையில்இருக்கும். ஒரு கட்சிக்கு தலைவர், கட்சித் தலைவர் போல் நடந்து கொள்ள வேண்டாமா? எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே தரம் உள்ள கட்சிகள்.எனவே எங்கள் கூட்டணி கட்சிகள் மீது மக்கள் மத்தியில் தனி மரியாதை உண்டு, நீங்கள் எதை பற்றி பேசினாலும் எங்களுக்கு அதை பற்றி கவலை இல்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற கூட்டணி தான் எங்கள் கூட்டணி. உங்களுக்கு மக்கள் பூஜ்ஜியத்தை தான் தந்தார்கள். இந்த முறையும் அதையே தான் தருவார்கள். ஏனென்றால் நமது வாக்கு வங்கி அப்படி. நாம் அமைத்துள்ள கூட்டணி அப்படி. நமது கூட்டணியை பார்த்து ஸ்டாலின் அரண்டு, மிரண்டு போய் என்ன பேசுவதென்று தெரியாமலேயே பேசி வருகிறார். அவருக்கு அரசியல் ஜூரம் வந்து விட்டது. அவர் நிறைய தப்புக் கணக்கு போட்டு விட்டார்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இவர் 10 நாள் தான் நீடிப்பார். 20 நாள் தான் நீடிப்பார் என்றார். பட்ஜெட் வரை தான் தாங்கும் என்றார். பட்ஜெட்டை வெற்றிகரமாக முடித்தோம். மானியக் கோரிக்கை வரை தாங்கும் என்றார். மானிய கோரிக்கையை வெற்றிகரமாக முடித்தோம். இன்னும் 6 மாதம் தான் ஆட்சி இருக்கும் என்றார். ஆனால் தற்போது 2 ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில்அடியெடுத்து வைத்துள்ளோம்.

நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். உழைத்து இந்த நிலைக்கு முன்னேறி வந்துள்ளேன். இங்கிருக்கும் அனைவருமே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால் ஸ்டாலின் உழைத்து முன்னுக்கு வந்தவர் அல்ல. நான் வட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், தற்போது முதலமைச்சர் என்று உங்கள் ஆசியால் செயலாற்றி வருகிறேன். ஸ்டாலின் எப்போது பேசினாலும் முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று பேசுகிறார். உடனடியாக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பார். முதலமைச்சர் பதவி மீது ஒரு கண்ணாகவே இருப்பார்.

நாங்களா வேண்டாம் என்று சொல்கிறோம். மக்கள் அளித்தால் வாங்கிக் கொள்ளுங்கள். எங்களுக்கு பதவி ஆசை கிடையாது. நான் ஒரு விவசாயி. இன்றும் எனது வீட்டில் ஆடு, மாடு, கோழி வளர்க்கிறோம். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். தற்போது படிப்படியாக உயர்ந்து மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சேவை செய்து வருகிறேன். நான் எப்போது முதலமைச்சர் ஆனேனோ அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இடையூறுகள். இந்தியாவிலேயே அதிக போராட்டம் நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடுதான். அதுவும் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில். ஆனால் அந்த போராட்டக்காரர்களை அழைத்து பேசி சமாதானம் பேசி தீர்வு கண்ட ஒரே அரசு அம்மாவின் அரசு தான். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மக்கள் மனதில் இடம் பெற முடியாது.

நீங்கள் கனவில் கூட முதலமைச்சர் ஆக முடியாது. அதுவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு முடிந்து விடும்.ஏனென்றால் உழைத்து முன்னுக்கு வர வேண்டும். உழைப்பவர்களுக்கு மரியாதை தர வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். ஒரு கட்சிக்கு தலைவர் என்றால் தலைவர் போல் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் அப்படி நடந்து கொள்கிறாரா? அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்கிறார். என்ன ஊழல். ஊழலை நிரூபியுங்கள் பார்க்கலாம்.

சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அனைத்து தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறோம். வேலைவாய்ப்பை பெருக்கி உள்ளோம். வலிமையான பாரதம் வேண்டும் என்றால் திறமையான பிரதமர் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். வலிமையான பாரதம், வளமான தமிழகத்துக்கு கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.