சிறப்பு செய்திகள்

மு.க.ஸ்டாலின் கனவு கானல் நீராகி விடும் – முதலமைச்சர் கடும் தாக்கு…

கன்னியாகுமரி:-

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் நிலையான ஆட்சி அமைவது உறுதி. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவு கானல் நீராகி விடும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தோவாளை, நாகர்கோவில், திங்கள்சந்தை ஆகிய இடங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி மலர வேண்டும். அதற்கு மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நமது கழக கூட்டணி பா.ஜ.க வின் சின்னம் தாமரை. நாட்டை வழி நடத்தி செல்லக்கூடிய உறுதியான திறமையான வலிமையான தகுதிவாய்ந்த பிரதமராக திகழ்ந்து வரும் மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க நாம் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஒரு நாட்டில் நிலையான பிரதமர் இருந்தால் தான் நிலையான ஆட்சியை தர முடியும். நாடு வளம்பெற, நாடு சிறக்க, நாட்டுமக்கள் வளமோடு வாழ வேண்டும். அதற்காகத்தான் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இன்றைய தினம் நமது கூட்டணி ஒரு பக்கம். தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணி ஒரு பக்கம். என்னை பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மனப்பான்மையுள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளோம். தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கும் போது 37 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். ஒரு இடத்தில் பா.ம.க.வும், ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் நாங்கள் தனி அணியாகவும், பா.ஜ.க., தனி அணியாகவும் போட்டியிட்டோம். அவர்களது வாக்குகளையும், நமது வாக்குகளையும் சேர்த்து பார்த்தால் 70 சதவீத மக்கள் நம் பக்கம் தான் இருக்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு இடத்திலும் என மொத்தம் 40 இடங்களிலும் நமது கூட்டணி தான் வெற்றி பெறும்.

நமது கூட்டணி வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள். மத்தியில் நிலையான ஆட்சி அமைவது உறுதி. இன்றைக்கு நமது கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டு உள்ளார். எதிர்க்கட்சிகள் இன்று வரை யார் பிரதமர் என்று அறிவிக்கவில்லை. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் ராகுல்காந்தி பிரதமர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த கூட்டணியில்இருக்கும் யாராவது ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்வார்களா? ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவரும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், உத்தர பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியும் பிரதமர் கனவில்தான் இருக்கிறார்கள். ஆக எல்லோரும் பிரதமர் கனவில் இருக்கும் போது இவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கவும் முடியாது. தற்போது தேர்தல் முடிந்த பிறகு ஒன்றாக அமர்ந்து தேர்ந்தெடுப்போம் என்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே ஒற்றுமை இல்லாத அவர்கள் ஜெயித்த பிறகு எப்படி ஒற்றுமையாக இருப்பார்கள். அதனால் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெறுவது நமது மெகா கூட்டணி தான்.

பிரதமராக அமர போவது நமது பிரதமர் நரேந்திர மோடிதான். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போகும் இடமெல்லாம் பிரதமரை பற்றியும், என்னை பற்றியும், நமது வேட்பாளர்களை பற்றியும், நமது கூட்டணி கட்சி தலைவர்களை பற்றியும் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகிறார். அவருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவர் கண்ட கனவு ஒன்றாகவும், நடப்பது வேறொன்றாகவும் ஆகி விட்டது. எனவே அவரது கனவு கானல் நீராகி விடும். இதனை அறிந்து தான் அவர் பித்து பிடித்தவர் போல் பேசி வருகிறார். அவர் நல்ல நிலையில் இல்லை.

பிரதமரும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், நாங்களும் குமரி மாவட்டத்தில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். எத்தனை பாலங்களை கட்டியிருக்கிறோம். எத்தனை சாலைகளை போட்டிருக்கிறோம் என்பதை பகிரங்கமாக சொல்கிறோம். அதை சொல்லி தான் நாட்டு மக்களிடம் நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஆனால் ஸ்டாலின் ஊர் ஊராக கதை சொல்கிறார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என்று என்னை பற்றி கதையாக பேசிக் கொண்டிருக்கிறார். என்னை பற்றி கதை பேசி என்ன பிரயோஜனம். நாட்டு மக்களுக்கு நல்லது செய்யுங்கள். நாட்டு மக்களுக்கு என்ன செய்தோம் என்று சொல்லி வாக்குகள் கேட்டால் பரவாயில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தீர்கள். அதை என்னிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும்,் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரமும், நமது இயக்கத்தை சேர்ந்தவர்களும், கூட்டணி கட்சியினரும் ஒருமித்த கருத்தோடு வலியுறுத்தினார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையில் தான் நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் உங்களது சார்பாக நான் அதை அறிவித்தேன். அந்த அறிவிப்புக்கு இணங்க கடந்த 28.2.2019 அன்று நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம ்உயர்த்தப்பட்டது. மேலும் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆக நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தந்துள்ளோம்.

இதேபோன்று ரூ.251 கோடியில் ஊரக குடிநீர் திட்டப் பணிகள் இந்த மாவட்டத்தில் நடைபெற்றுகொண்டிருக்கிறது. அதை போல் ரூ.45 கோடியில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சி மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. நாகர்கோவிலில் அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தது மறைந்த புரட்சித்தலைவி அம்மாவும், அவரது தலைமையிலான அரசும் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று நாகர்கோவிலில் முதன் முதலாக ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்ததும் புரட்சித்தலைவி அம்மா தலைமையிலான அரசு தான். ஆகவே நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியல் நிறைய இருக்கிறது.

கன்னியாகுமரி சிறந்த சுற்றுலா மையம். அங்கு விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு ரோப்கார் வசதி மத்திய அரசு உதவியோடு செயல்படுத்தப்படும். ரூ.125 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல் விவேகானந்தர் பாறைக்கும், அய்யன் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் ஒன்று சுற்றுலா மேம்பாட்டுக்காக கட்டப்படும். இன்னும் ஏராளமான திட்டங்களை கழக அரசு செய்ய இருக்கிறது. 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கும் போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம்.

விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை அவரவர் வங்கி கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என்று அறிவித்து அதை நிறைவேற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே எண்ணம் உள்ள ஆட்சி அமைய திறமையான பாரத பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்காக நீங்கள் இந்த முறை பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.

பிரச்சாரத்தின்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.