தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவேசம்…

கோவை:-

பொய்யான அறிக்கை விடுவதும், அவதூறு பரப்புவதுமே தி.மு.க.வுக்கு வாடிக்கை என்றும், மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேற்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் கரடிமடை, அத்திபாளையம், பூளுவப்பட்டி, நாத கவுண்டன்புதூர், ஆலந்துறை, மத்வராயபுரம், இருட்டுப்பள்ளம், செம்மேடு, காருண்யா, நரசிபுரம், முகாசி மங்கலம், வெள்ளிமலை பட்டிணம், தேவராயபுரம், புதுப்பாளையம், பூச்சியூர், குரும்பபாளையம், வேடபட்டி, நம்பியழகன் பாளையம், பேரூர் ஆகிய பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் சோதனைகளை கடந்து தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி கழகத்தை மாபெரும் இயக்கமாக உருவாக்கியுள்ளனர். அவர்களது வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து அனைத்து திட்டங்களையும் பெறும் வகையில் நமது கூட்டணி அமைந்துள்ளது.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, அனைத்து சாலைகளும் சீரமைப்பு, உலகத்தரத்தில் பொள்ளாச்சி-கோவை நான்கு வழிச்சாலை என எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இதன் மூலம் கூடுதலாக 200 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். 70 ஆண்டுகால மக்களின் கோரிக்கையான அத்திக்கடவு -அவினாசி திட்டம் 3 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கழக அரசின் சாதனை சொல்லிக்கொண்டே போகலாம்.

மேலும் தொண்டாமுத்தூர் ஒன்றிய பகுதி மற்றும் மதுக்கரை வனச்சரகம் வெள்ளப்பதி பிரிவு நண்டக்கரை, முண்டன்துறை, கோவைப்புதூர், போளுவாம்பட்டி வனச்சரகம், நரசீபுரம், தாளியூர் மற்றும் இவற்றை சுற்றியுள்ள இடங்களில் தடுப்பணைகளை அமைத்தும், குளம் குட்டைகளில் மழை நீரை நிரப்பியும், நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். குறுகிய சாலையாக இருந்த கோவை சிறுவாணி காளம்பாளையம் முதல் இருட்டுப்பள்ளம் வரை ரூ.18 கோடி நிதியை பெற்று தார்சாலை அகலப்படுத்தும் பணிக்கு கழக வேட்பாளர் பெரும் உதவியாக இருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் கழக வேட்பாளர் சி.மகேந்திரன் மத்திய அரசிடமிருந்து 5000 கோடிக்கு நிதியினை பெற்று அதனை தொகுதி வளர்ச்சிக்கு செயல்படுத்தி உள்ளார். ஆனால் மத்திய கூட்டணி ஆட்சியில் கேபினட் பதவிகளை பெற்றுக்கொண்டு தமிழகத்திற்கு திமுக துரோகம் மட்டுமே செய்தது. பொய்யான அறிக்கைகள் விடுவதும் அவதூறு பரப்புவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டு பகல் கனவு காணும் ஸ்டாலின் உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். பாரத பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் வலிமையான ஆட்சி அமையவும், மத்திய, மாநில அரசின் மக்கள் திட்டங்கள் தொடரவும், கழக வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

பிரச்சாரத்தின்போது கழக நிர்வாகிகள் டி.எஸ்.ரங்கராஜ், என்.கே.செல்வதுரை, என்.எஸ்.கருப்புசாமி, ஜி.கே.விஜயகுமார், டி.ஏ.சந்திரசேகர், ஏ.எஸ்.மகேஸ்வரி, வேணுகானம், ஆறுச்சாமி, கே.கே.கதிரவன், மோகன்ராஜ், புரட்சித்தம்பி, விவேகா சுரேஷ், ஆர்.சசிகுமார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.