தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலின் விரைவில் அரசியலை விட்டு ஓடுவார் – அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆவேசம்…

ராமநாதபுரம்:-

இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஸ்டாலின் அரசியலை விட்டு விலகி விடுவார் என்று அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆவேசமாக பேசினார்.

ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் அருகே உள்ள பா.ஜ.க காரியாலயத்தில் கழக கூட்டணியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா, மாவட்டக் கழக அவைத்தலைவர் செ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பா.ஜ.க மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில துணைத் தலைவர் குப்புராமு, தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, பா.ம.க மாவட்ட செயலாளர் அக்கீம், வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசியதாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடும். முதல்வர் மற்றும் துணை முதல்வரின் ஆதரவோடும் போட்டியிடும் கழக கூட்டணி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வெற்றிபெற வைப்பது கழக தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடமை ஆகும். ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்வது போல் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்கப்பெற நாம் பா.ஜ.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும். கூட்டணி கட்சிகளோடு இணைந்து செயல்பட்டு வெற்றியை மட்டும் இலக்காக கொள்ள வேண்டும். தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் ஸ்டாலின் இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் காணாமல் போய் விடுவார். அனைத்து தொகுதிகளிலும் கழக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசினார்.

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், தொகுதியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். ராமநாதபுரத்தில் விமான நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி அமைய மத்திய, மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை, இந்திய சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொல்லையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்குடி – கன்னியாகுமரி இடையேயான ரயில் பாதை திட்டம் குறித்து விவரம் கோரப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வினர் வெற்றி வியூகத்தை நான் நன்கறிவேன். களப்பணியாற்றுவதில் அ.தி.மு.க தொண்டர்களின் உழைப்பை நான் தெரிந்தவன். நான் வெற்றிபெற்றால் நிச்சயம் இந்த மாவட்ட மக்களுக்காக உழைப்பேன் என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆனிமுத்து, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், மாவட்ட சிறுபான்மை செயலாளர் தர்வேஸ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பால்பாண்டியன், மண்டபம் ஒன்றியச் செயலாளர் தங்கமரைக்காயர் மற்றும் கழக நிர்வாகிகள் தஞ்சி சுரேஷ், முத்து பாண்டியன், பாலசுப்பிரமணியன், குமார், நாட்டுக்கோட்டை ஜெய கார்த்திகேயன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர கழக துணை செயலர் ஆரிப்ராஜா நன்றி கூறினார்.