தற்போதைய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு தேசிய விருது – முதலமைச்சரிடம் காண்பித்து அமைச்சர் வி.சரோஜா வாழ்த்து

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை 5.11.2019 அன்று தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா சந்தித்து, புதுடெல்லியில் 4.10.2019 அன்று நடைபெற்ற விழாவில், மூத்தகுடிமக்களுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இந்திய குடியரசுத் தலைவரால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட தேசிய விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

புதுடெல்லியில் 4.10.2019 அன்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், 2018-19-ம் ஆண்டில், “பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் 2007”-ன்படி, மூத்த குடிமக்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதற்கும் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து, மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில் முதியோர் ஓய்வூதியம் வழங்குதல், முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாகங்கள், நடமாடும் மருத்துவ மையங்கள், உடற்பயிற்சி சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை மூத்த குடிமக்களின் நல்வாழ்விற்காக சிறப்பான முறையில் செயல்படுத்தியமைக்காக இந்திய குடியரசுத் தலைவரால் தமிழ்நாட்டிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் க.சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளர் எஸ்.மதுமதி, சமூகநல ஆணையர் த.ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.