சிறப்பு செய்திகள்

மெரினாவில் அம்மா நினைவிடம் அமைக்க எந்த தடையும் இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

புதுடெல்லி:-

சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவி அம்மா நினைவிடம் அமைப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் சுமார் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து அப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தண்டிக்கப்பட்டவர் என்று கூறி ஒருவர் சென்ைன உயர்நீதிமன்றத்தில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

அதன் மீது தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை எனவும், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே அவர் இறந்து விட்டார். எனவே அவரை குற்றவாளியாக கருத முடியாது எனவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள் நினைவிடம் அமைப்பதற்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேறொரு நபர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடற்கரையோரம் உள்ள பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அமையும் என்பதாலும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் முறையான அனுமதி பெற்று தான் நினைவிடம் அமைக்கப்படுகிறது என்றும், இதற்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தனர்.