ராமநாதபுரம்

மொழியை வைத்து ஊழல் செய்த இயக்கம் தி.மு.க. : கழக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி கடும் தாக்கு

ராமநாதபுரம்:-

மொழியை வைத்து ஊழல் செய்த இயக்கம் தி.மு.க. என்று கழக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசியதாவது:-

தமிழையும், தமிழர்களையும் இரு கண்களாக பாவித்து தமிழ் மொழிக்காக பாடுபடும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் திமுக தமிழ், தமிழர்கள் என தமிழகத்தையே வைத்து பிழைப்பு நடத்தி ஊழல் செய்த இயக்கம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரு பெரும் தலைவர்களை பெற்ற இயக்கம் கழகம். அண்ணாவின் கொள்கைகளையும், மொழி கொள்கைகளையும் பின்பற்றிய இயக்கம் நமது இயக்கம்.

திமுகவிற்கு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடத்தும் தகுதி கிடையாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் முதல்வராக இருந்தபோதே மறைந்தவர்கள். ஆனால் கருணாநிதி இறந்த போது அவருக்கு இடம் கூட கிடைக்கவில்லை. அவரது சமாதிக்கு இடம் கேட்டு நமது முதல்வரை கெஞ்சினார் ஸ்டாலின். முதல்வரும் இரக்கமுற்று இடம் வழங்கினார். தமிழக மக்களுக்கு திமுக செய்த துரோகத்தின் வினை பயனாக ஒவ்வொன்றாக அனுபவித்து வருகின்றனர்.

அண்ணாவின் தலைமையில் இருந்த திமுக தான் தமிழர்களையும், தமிழையும் வாழ வைத்தது. கருணாநிதி கையில் இருந்த திமுக தமிழை வைத்தும், தமிழர்களை வைத்தும் ஊழல் செய்தது. மொழியை வைத்து ஊழல் செய்த ஒரே தலைவர் கருணாநிதி தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக வருவதற்கு முன்பு 17 ஆயிரம் ரேஷன் கடைகள் தனியார் மயமாக இருந்தன.

பின்பு அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் 27 ஆயிரம் ரேஷன் கடைகளாக தரம் உயர்த்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங்கினார். இன்றும் பல இளைஞர்களுக்கு வேலை வழங்கும் இயக்கமாக நமது ஆட்சி இருக்கிறது. தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர் கருணாநிதி. ஆனால் கருணாநிதி மகன் ஸ்டாலின் தமிழை பார்த்து கூட படிக்கத் தெரியாதவராக இருக்கிறார். தமிழ் தெரியாமல் ஸ்டாலின் இருப்பது தமிழகத்திற்கு அவமானம்.

இவ்வாறு கழக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசினார்.