தற்போதைய செய்திகள்

மோசடி கும்பலின் முகத்திரை விரைவில் கிழித்தெறியப்படும் – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு…

கரூர்:-

மோசடி கும்பலின் முகத்திரை விரைவில் கிழித்தெறியப்படும் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து, தும்பிவாடி பகுதியில், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டு மக்கள் ஒருமித்த குரலில் விடுத்த அழைப்பை ஏற்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம்தான் அ.இ.அ.தி.மு.க. தீயசக்தியின் கொடூரமான அடக்குமுறை, வன்முறை வெறியாட்டம் ஆகியவற்றை எல்லாம் வெற்றிகரமாக சமாளித்து இந்த இயக்கத்தை கண்ணை இமை காப்பது போல காப்பாற்றியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்..

புரட்சித்தலைவரின் மறைவிற்குப் பிறகு கழகத்தை அழித்து விட துடித்த அரசியல் எதிரிகளால் பல்வேறு சோதனைகளையும், சொல்லொண்ணா சூழ்ச்சிகளையும் முறியடித்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமை ஏற்றதில் இருந்து எம்.ஜி.ஆரால் தோற்றுவித்த ஒளிவிளக்கை அணையாது பாதுகாத்து வருகிறார்கள். பட்ட துயரங்கள், ஏவி விடப்பட்ட ஏச்சுக்கள், பேச்சுகள், அவதூறுகள், காயங்கள், கண்ணீர்கள் என்று பக்கம், பக்கமாக சொல்லலாம். ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல என்பதை போல, எத்தனையோ துன்பங்கள் வந்தாலும், அதை எல்லாம் தாங்குகிற எஃகு போன்ற மன உறுதியுடன் இந்த இயக்கத்தை வழி நடத்தி சென்று இன்று நம்மிடையே ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு, ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்து, தி.மு.க.வும், தினகரனின் அ.ம.மு.க.வும் கூட்டணி சேர்ந்திருக்கிறது. இந்த கூட்டணி எத்தனை நாளைக்கு என்பது போக போகத்தான் தெரியும். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு கழகத்தை அழிக்க நினைத்து தினகரனுடன் கூட்டு சேர்ந்தார். தற்போது தீய சக்தியான தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து இத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2000-ம் ஆண்டு கழகத்தில் இணைந்த செந்தில்பாலாஜிக்கு, மாணவர் அணி பொறுப்பு, மாவட்டச் செயலாளர், பின்னர் 2006-ம் ஆண்டு கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2011-ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்துத்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார். ஆனால், அதையெல்லாம் இன்றைக்கு மறந்து விட்டு, தன்னை வாழ வைத்த கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு, எதிரிகளிடம் தஞ்சம் புகுந்துள்ளார்.

இத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிடிவி தினகரன், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த மருத்துவக் கல்லூரியை அடிப்படையாக வைத்து ரியல் எஸ்டேட் நடத்தினார் என்று செந்தில்பாலாஜியின் ரகசியத்தை அம்பலமாக்கினார். பதிலுக்கு செந்தில்பாலாஜி தினகரனின் கம்பெனி ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார். இதில் இருந்து மொத்த மோசடி கும்பல்களின் முகத்திரை கிழியப் போகிறது.

‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பதை போல, கழகத்தை அழிக்க நினைக்கும் தி.மு.க. – அ.ம.மு.க.வின் கூட்டுச்சதி ஒரு போதும் நிறைவேறாது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவோடும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும் பீடுநடை போட்டு கொண்டிருக்கும் கழக அரசை, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் என்கிற ஒற்றை அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்து விட முடியாது.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டையை கிழித்துப் பார்த்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மூக்கறுபட்ட நிலையில், மன்னார்குடி மாஃபியா தலைவனுடன் பேச்சுவார்த்தை நடத்தி சதித்திட்டங்களை தீட்டி எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் அதுவும் முடியாமல் போய் விட்ட நிலையில், கழக ஆட்சியை கவிழ்க்கிறேன், மே 23-க்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும் என்றெல்லாம் உளறுவது கதைக்கு உதவாத பேச்சாகத்தான் இருக்கிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்.

பிரச்சாரத்தின்போது சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி ஆகியோர் உடனிருந்தனர்.