தற்போதைய செய்திகள்

மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் வலிமையான பாரதத்தை உருவாக்குவோம் – அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பிரச்சாரம்…

ஈரோடு:-

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அந்தியூர் தொகுதி கோபி ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கண்ட வெற்றிச்சின்னமான இரட்டைஇலை சின்னத்தில் கழகத்திற்காக நாளும் உழைத்து வரும் எளிமையான வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாக்குகளை அளித்து அவரை மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். நூறு நாட்கள் வேலைத் திட்டமானது மத்திய அரசு மூலம் 365 நாட்களும் வேலை வழங்கும் திட்டமாக மாற்றப்படவுள்ளது. இந்தப் பகுதியில் தேங்காய்க்கு அதிகவிலை கிடைக்கச் செய்யும் வகையில் தொழிற்சாலை உருவாக்கப்பட உள்ளது.

அம்மாவின் ஆட்சியில் 20 கிலோ விலையில்லா அரிசி, தாலிக்கு ரொக்கத்துடன் கூடிய தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18000/- உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அம்மா காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு மருத்துவ வசதி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெற ஆங்கில கல்வி கற்கும் வகையில் வரும் கல்வியாண்டில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் காலணிக்குப் பதில் அடுத்த ஆண்டில் ஷு வழங்கப்படவுள்ளது.

1 முதல் 8-ம் வகுப்பு வரை புதிய வண்ண சீருடைகள் வரும் கல்வியாண்டில் வழங்கப்படும். 8,9, 10,11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு வரும் ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் மடிகணினிகள் வழங்கப்படும். 9,10,11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்காக இண்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் மே மாத இறுதிக்குள் அமைக்கப்படும். பொலவக்காளிபாளையம் ஊராட்சி பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு புதிய குடியிருப்புகள் அமைத்துத் தரப்படும். வலிமையான பாரதத்தை உருவாக்க நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் மத்திய, மாநில அரசிற்கு மக்கள் தங்கள் நல்லாதரவை தொடர்ந்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், கோபி ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எம்.மனோகரன், பொலவக்காளிபாளையம் ஊராட்சி செயலாளர் பி.வி.சீனிவாசன், முன்னாள் யூனியன் சேர்மன் பி.வி.தங்கம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சவுண்டப்பூர் ரமேஷ், கே.பழனிச்சாமி, எஸ்.பி.பழனிச்சாமி, ஈ.செல்வராஜ், சரவணன், திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் கோகுல், இளங்கோ, அருளானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.