தற்போதைய செய்திகள்

மோடி தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அமையும் – மதுரையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு…

மதுரை:-

மோடி ஆட்சியில் இந்தியா வளர்ந்த நாடுகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. எனவே அவரது தலைமையில் தான் மீண்டும் ஆட்சி அமையும் என்று மதுரையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய், புரட்சித்தலைவி அம்மா, கருணாநிதி ஆகியோர் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு இந்த 3 தலைவர்கள் இல்லாத ஒரு தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. நமது நாட்டை ஆங்கிலேயர்கள் சீரழித்தனர். அந்த வேளையை தற்போது காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர். அவர்கள் நமது நாட்டை 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். இதனால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே துரத்தியடிக்கப்பட்டு விட்டது. ஆனால் பின்வாசல் வழியே காங்கிரஸ் நுழைய பார்க்கிறது. காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. நல்ல தலைமையில்லாத காங்கிரஸ் மூழ்கும் கப்பலை போன்றது. இதையெல்லாம் தெரிந்தும் அந்த கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

கருணாநிதி ஆட்சி இரண்டு முறையும், புரட்சித்தலைவர் ஆட்சியை ஒரு முறையும் என 3 தடவை தமிழகத்தில் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ். தற்போது அந்த கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விடும் என்று தி.மு.க.வினர் நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியை சர்வதேச அளவில் பெருமையுடன் பேசுகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியின் போது டாப் 10 நாடுகள் என்ற பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் இருந்தது. தற்போது மோடி ஆட்சியில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகள் பட்டியில்ல இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும். அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியா இடம்பெறும். அது போல பணவீக்கம் 0.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. மோடி அரசு ஏழைகளுக்கு 1 கோடியே 36 லட்சம் வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. 98 சதவிகிதம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 7 கோடி பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு தரப்பட்டுள்ளது.

2022-க்குள் அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் சமையல் எரியவாயுத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும். மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் மீண்டும் அமையும். காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த மந்திரிகள் அனைவரும் ஜெயிலில் உள்ளனர். அல்லது பெயிலில் உள்ளனர். ஆனால் பா.ஜ.க. மந்திரிகள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் முகாம்கள் 15 நாட்களில் தகர்க்கப்பட்டது. தீவிரவாத தாக்குதலில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்று எதிர்கட்சிகள் கேட்கின்றனர். கவுரவம் உள்ளவர்கள் உடல்களை எண்ணிப் பார்க்க மாட்டார்கள். உத்திரபிரதேச மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. மதுரையில் நசிந்து வரும் கைத்தறி நெசவுத்தொழிலை பாதுகாக்க பாடுபடுவோம். மதுரையில் வாழும் 21 சதவிகித ஓ.பி.சி. மக்களுக்கான சலுகைகள் வழங்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், பா.ஜ.க. புறநகர் மாவட்ட செயலாளர் சுசேந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன், தே.மு.தி.க. மாவட்ட தலைவர் கவியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.