தற்போதைய செய்திகள்

மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை…

நாகப்பட்டினம்:-

மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசுகையில், நமது கூட்டணி மிகப் பெரிய பலமான கூட்டணி. திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கழகத்தின் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியை எவராலும் வெல்ல முடியாது. இந்திய திருநாட்டிற்கு மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:- 

5 ஆண்டு காலம் இந்தியாவிலே எந்த ஒரு மாநிலத்திலும் மத கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஆட்சி நடத்தியவர் பிரதமர் மோடி. இந்தியாவை வழிநடத்துகிற பிரதமராக இருப்பவர் மோடி. 80 தொகுதி கை கழுவி இருகிற காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எப்படி பிரதமராக வர முடியும்? வாய்ப்பே இல்லை. ஆனால் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்தி என ஸ்டாலின் முன்மொழிந்தார். ஆனால் மேற்கு வங்கத்தில மம்தா பானர்ஜி கூட்டிய மாநாட்டில் அதைப்பற்றி அவர் வாயை திறக்கவே இல்லை. பிரதமர் யார் என்று கூட தெரியாத கூட்டணி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. ஆனால் நம் கூட்டணியில் மோடி தான் பிரதமர். அவர் மீண்டும் பிரதமராக வருவார்.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தருகிற தொகுதி வேதாரண்யம் தொகுதி. இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுத்தரும் தொகுதியாக வேதாரண்யம் திகழும் என்று நம்புகிறேன். நாகை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் தாழை சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னான் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.டி.ரவிச்சந்திரன், மாநில மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சுப்பையன், ஒன்றிய செயலாளர் ஆர்.கிரிதரன், தலை ஞாயிறு ஒன்றிய செயலாளர் அவை.பாலசுப்ரமணியன், முன்னாள் நகரமன்ற தலைவர் நமச்சிவாயம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தீலிபன், முன்னாள் தொகுதி கழக செயலாளர் சண்முகராசு, கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.ராதாகிருஷ்ணன், பா.ம.க மாவட்ட செயலாளர் வி.ஆர்.சிவக்குமார், மாநில பா.ஜ.க. செயலாளர் எஸ்.கே.வேதரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகையன், தேமுதிக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரவநாதன், மாவட்ட விவசாய அணி தலைவர் கி.செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.