இந்தியா மற்றவை

ராகுல்காந்தியை அமேதி மக்கள் யாரும் மன்னிக்க மாட்டார்கள்- ஸ்மிருதி இரானி…

அமேதி:-
காங்கிரஸ் தலைவர் ராகுல், 2019 மக்களவைத் தேர்தலில்  உத்தரப்பிரதேசத்தின் அமேதி மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் சென்று அங்கு வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இந்நிலையில், அமேதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:
அமேதி தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது யார்? அமேதி தொகுதியை அதிகமுறை பார்வையிட்டு, மக்களை சந்தித்தவர் யார்? வயநாடு தொகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அமேதியில் இதுவரை என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை வயநாடு மக்கள் தெரிந்துகொண்டால் போதுமானது.
காங்கிரஸ் தலைவர் ராகுல், அமேதி தொகுதியில் தொடர்ந்து 15 வருடங்களாக பதவியில் உள்ளார். ஆனால், இப்போது மற்றொரு தொகுதியை தேர்ந்தெடுப்பது ஏன்? இது அமேதிக்கு ஏற்பட்ட அவமானம். இதனை அமேதி மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அமேதி தொகுதி மக்களால் தான் ராகுலுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி கிடைத்தது. அனைத்து சுகங்களையும் அனுபவித்துவிட்டு அமேதி தொகுதியை ராகுல் புறக்கணித்துவிட்டார்.ஆனால், அமேதி தொகுதியில் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ள பாஜக தலைமைக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.