தற்போதைய செய்திகள்

ராகுல்காந்தி – மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கடும் தாக்கு…

திண்டுக்கல்:-

வடமாநிலங்களில் செல்வாக்கு குறைந்து விட்டதால் கேரளாவில் ராகுல் போட்டியிடுகின்றார். உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் எப்படி விலை போகும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசி உள்ளார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணி வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஆகிய ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான பி.கே.டி. நடராஜன் தலைமை தாங்கினார். ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கி பேசினார். கழக அமைப்புச் செயலாளர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

இதன்பின்னர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 350 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்று தனித்து பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்கும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், கழக கூட்டணியே மகத்தான வெற்றியைபெறும். 18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் கழகமே அமோக வெற்றிபெறும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் ராகுல்காந்தியோ கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகின்றார். அவர் தென்மாநிலத்திற்கு வர வேண்டிய அவசியம் என்ன? வட மாநிலங்களில் காங்கிரசுக்கு செல்வாக்கு சரிந்து விட்டது. அதனால் தென் மாநிலமான கேரளாவில் ராகுல் போட்டியிடுகின்றார். உள்ளூரில் விலை போகாத மாடு எப்படி வெளியூரில் போகும்? இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தியும், தமிழக முதல்வராக ஸ்டாலினும் பகல் கனவு காண்கின்றனர். அது சினிமாவில் வேண்டுமானால் நடக்கலாம். நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று.

எதிரணிக்கு சிம்மசொப்பனமாக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். அவர் திட்டமிட்டு மக்களுக்கு ஏற்ற நன்மைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் காரணமாக விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் முதல்கட்டமாக ரூ. 2000 வரவு வைத்துள்ளார். அதேபோல் அம்மாவின் ஆட்சியும் மக்களுக்கு ரூ. 2000 வழங்கியுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள்.

அத்திட்டங்கள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. இதனை அனைத்தும் கழக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக ஆட்சியில் செய்ய முடிந்ததா? மத்திய அரசோடு மாநில அரசு இணக்கமாக இருந்தால் தான் ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்கும். அதன் பலனாகவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ரூ.2500 கோடி மதிப்பீட்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

இம்மருத்துவமனையில் சாதாரண ஏழை தொழிலாளிக்கும், சிறந்த வைத்தியம் பார்க்க முடியும். இதுபோன்று நாடு முழுவதும் புல்லட் ரயில், விமான நிலையம், நான்கு வழி சாலை என எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். இதனால் தான் அ.இ.அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமைந்து உள்ளது.
எனவே மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கழக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஜோதிமுத்துவை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். அதேபோன்று நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளருக்கு தேன்மொழி சேகரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இக்கூட்டத்தில் ஆத்தூர் முன்னாள் சேர்மன் கோபி மற்றும் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.