தற்போதைய செய்திகள்

ராசிபுரம் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.40 கோடியில் குடிமராமத்து பணிகள் – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தகவல்

நாமக்கல்

ராசிபுரம் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.40 கோடிக்கு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்குறிச்சி, கூனவேலம்பட்டி, முத்துக்காளிப்பட்டி, முருங்கப்பட்டி, அணைப்பாளையம், சந்திரசேகரபுரம், சிங்களாந்தபுரம், காக்காவேரி, பட்டணம் முனியப்பன்பாளையம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக, பிள்ளாநல்லூர், பேரூராட்சி வண்டிக்காரன் தெரு மற்றும் தட்டான் காடு ஆகிய பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, குருக்கபுரம் ஊராட்சி, குருசாமி பாளையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, முத்துக்காளிபட்டியில் ரூ.47,000 மதிப்பில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, முருங்கபட்டி ஊராட்சியில் ரூ.22.20 லட்சம் மதிப்பில் அணைப்பாளையம் பாச்சல் ரோடு முதல் கடந்தபட்டி எல்லைவரை சாலை மேம்பாட்டு பணி, சந்திரசேகரபுரம் ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பில் சந்திரசேகரபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் போடிநாயக்கன்பட்டி வரை சாலை மேம்பாட்டு பணி,

காக்காவேரி ஊராட்சியில் ரூ.48.50 லட்சம் மதிப்பில் காக்காவேரி முதல் பூசாரிபாளையம் வரை சாலை மேம்பாட்டு பணி ஆகிய பணிகளை கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா தொடங்கி வைத்தார். மேலும் பொன்குறிச்சி ஊராட்சியில் ரூ.17.64 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் ரூ.8.70 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசியதாவது:- 

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமானது அரசாங்கமே மக்களை தேடிச்சென்று, மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று விரைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு வழங்கப்படக்கூடிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டன. ராசிபுரம் வட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீட்டுமனைபட்டா வழங்குதல், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை ஆணைகள் வழங்குதல், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுதல் திட்டம், கிராமபுற சாலைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.39.54 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 4,024 எண்ணிக்கையில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டம், அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டப்பணிகள், பாரத பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டப்பணிகள், சாலை மேம்பாட்டு திட்டப்பணிகள், பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டப்பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பணை அமைக்கும் பணிகள், தூர்வாரும் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம், ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளரும், காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.காளியப்பன், ராசிபுரம் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பி.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.