தற்போதைய செய்திகள்

ராசிபுரம் தொகுதி அணைப்பாளையத்தில் பெண்களுக்கான அதிநவீன விடுதி – அமைச்சர் வெ.சரோஜா தகவல்…

நாமக்கல்:-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட அணைப்பாளையம் பகுதியில் பெண்களுக்கான அதிநவீன தங்கும் விடுதி விரைவில் கட்டப்படும் என்று அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்தும், ராசிபுரம் நூலகத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, இணைய வசதி ஏற்படுத்துதல் குறித்தும் கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான மருத்துவர் வெ.சரோஜா ஆய்வு மேற்கொண்டார். மேலும் ராசிபுரம் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள் சாலைப்பணி, பசுமை வீடுகள் கட்டும் பணி குறித்து துறை அலுவலர்களுடன் ராசிபுரத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் வெ.சரோஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

இந்த நிதிநிலை அறிக்கையில் சமூக நலம்-சத்துணவுத் துறைக்கு ரூ.5127 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சத்துணவு துறை மட்டும் ரூ.1729.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் ஊட்டச்சத்து பெற்று நலமோடு கல்வி கற்றிட காய்கறிகள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ரூ.569 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்பெற மின்கலம் பொருத்தப்பட்ட 3000 நவீன சக்கர நாற்காலிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

அதேபோல இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் 3000 பேருக்கு வழங்கப்படும். இதனால் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் புதுப்பொலிவும் முன்னேற்றமும் ஏற்பட ஏதுவாக இருக்கும். மாற்றுத் திறனாளிகள் நலச்சட்டம்-2016 நிறைவேற்றப்பட்ட பிறகு, இத்துறையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால், மாநில அரசு சிறப்பு விருதுகளை பெற்றுள்ளது. தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு என நிதி ஆயோக் பாராட்டியுள்ளது. தேசிய ஊட்டச்சத்து இயக்கம் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது. மேலும் 21 மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் விரைவில் முடிவடையும். இங்கு சாலைகளை செப்பனிடுவதற்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராசிபுரம் புறவழிச்சாலை பொன்குறிச்சி முதல் அணைப்பாளையம் வரை முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் விரைவில் தொடங்கப்படும். ஏற்கனவே இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்து தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் பணிகள் விரைவில் தொடங்கும்.

ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இராசிபுரம்-நெடுங்குளம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் ஏற்கனவே விடுபட்ட கிராமங்களையும் சேர்த்து, புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தொகுதியில் ரூ.7.37 கோடி மதிப்பில் 168 பணிகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணைப்பாளையம் பகுதியில் பெண்களுக்கான அதிநவீன தங்கும் விடுதி கட்டுவதற்கு நிலம் பெறப்பட்டுள்ளது. மூன்று நட்சத்திர ஓட்டல்கள் தரத்திற்கு வணிகவளாகம், மனமகிழ் மன்றம், யோகா மையம் போன்றவை இதில் அமைக்கப்படும். வரும் நிதியாண்டில் இந்த நவீன தங்கும் விடுதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ராசிபுரம் பகுதியில் ரூ.9.14 கோடி நிதி ஒதுக்கீட்டில் 311 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. மேலும் அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு நிலம் கண்டறியப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் 400 கிலோ வாட் துணை மின்நிலையம் அமைக்க வனத்துறையிடமிருந்து நிலம் பெறப்பட்டு மின்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்களால் தமிழகம் ஏற்கனவே மின்மிகை மாநிலமாக உள்ளது. தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இதுபோன்ற திட்டங்கள் பேருதவியாக இருக்கும். அங்கன்வாடி மையங்களில் சத்துணவு மையங்களில் காலியாகும் பணியிடங்கள் அந்தந்த நிர்வாக வசதிப்படி உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார்.