தற்போதைய செய்திகள்

ராசிபுரம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணி குறித்து அமைச்சர் வெ.சரோஜா ஆய்வு…

நாமக்கல்:-

ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய திட்டப் பணிகள் குறித்து, கழக மகளிர் அணி இணைச்செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா, தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழக (டிஎன்ஐஎப்எம்சி) துணை இயக்குநர் மாலதிஹெலன், நகராட்சிகள், இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுடன், ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் களஆய்வுகளில் ஈடுபட்டார்.

அப்போது, ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் வணிகவளாகம் அமைக்க இடத்தைப் பார்வையிட்டார். பணிபுரியும் மகளிர்க்கு, எல்லை மாரியம்மன் கோவில் அருகே விடுதி அமைக்க ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் பூங்கா மேம்பாடு செய்தல், மின்வாரிய காலனியில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இடத்தைப் பெற்று, அங்கு வீட்டு வசதி குடியிருப்புகள் கட்டுதல், இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவிக பூங்காவை மேம்படுத்துதல், அங்குள்ள குடிநீர் கிணற்றை தரம் உயர்த்துதல், உழவர் சந்தையில் காலியாக உள்ள இடத்தில், பழைய கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகளை அமைத்தல், துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இத்திட்டங்களை செய்து முடிக்க மேற்கொள்ளவேண்டிய பூர்வாங்கப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழக (டிஎன்ஐஎப்எம்சி) முதல்வர் விவேக், நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, ராசிபுரம் நகர கழக செயலாளரும், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கித்தலைவரும், முன்னாள் நகர மன்ற தலைவருமான எம்.பாலசுப்பரமணியன், இராசிபுரம் நகராட்சி ஆணையர் வி.விஜயாஸ்ரீ, நகராட்சிப் பொறியாளர் பி.நடேசன், வட்டாட்சியர் சாகுல்ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.