தற்போதைய செய்திகள்

ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் இன்று ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.

ராஜராஜ சோழனின் சமாதி உடையாளூரில் அமைந்திருந்ததா என்பதற்கு தொல்லியல் அடையாளங்கள் எதுவும் உள்ளதா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்ததன் அடிப்படையில் இந்த ஆய்வு தொடங்கியுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், முதலாம் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் நுண்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறந்து விளங்கின. இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்கள் உள்ளன. இவருடைய ஆட்சி மற்றும் கட்டடக்கலை உலகளவில் பாரட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் சமாதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் பராமரிப்பின்றி சிதைந்து கிடக்கிறது. எனவே அவரின் சமாதி உள்ள இடத்தில் மணிமண்டபம் அமைக்கவும், சிலை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தொல்லியல் நிபுணர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக வழக்கை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த மனு மற்றும் ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வு தொடர்பான மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ராஜராஜ சோழனின் சமாதி மனுதாரர் குறிப்பிட்டுள்ள உடையாளூரில் தான் அமைந்திருந்ததா என்பதற்கு தொல்லியல் அடையாளங்கள் எதுவும் உள்ளதா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.