சிறப்பு செய்திகள்

ராமநாதபுரத்தில் மிக விரைவில் மருத்துவக் கல்லூரி தொடக்கம் – முதலமைச்சர் தகவல்…

ராமநாதபுரம்:-

ராமநாதபுரத்தில் மிக விரைவில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி (தனி) சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சதன் பிரபாகரன் ஆகியோரை ஆதரித்து சாயல்குடி, ஏர்வாடி, ராமநாதபுரம் அரண்மனை சாலை, சத்திரக்குடி, பரமக்குடி, பார்த்திபனூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்து ஆற்றிய உரை வருமாறு:-

மத்தியில் ஒரு நிலையான, உறுதியான ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதற்காகவும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி இந்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறோம். தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியால் தான் ஒடுக்க முடியும். மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதற்காகவே நமது இயக்கம் இயற்கை கூட்டணியை அமைத்துள்ளது. நாங்கள் செய்த நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு கேட்கிறோம். செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் எங்களை புன்னகை தவழ வரவேற்கின்றனர்.

நமது கழக ஆட்சியில் தான் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும். புரட்சித்தலைவி அம்மா பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தினார். உதாரணமாக தாலிக்கு தங்கம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், மகப்பேறு நிதியுதவி, அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம், கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை, கர்ப்ப காலத்தில் ஊட்டசத்து பெட்டகம் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை தாயுள்ளத்தோடு செயல்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா.

மோடி பிரதமரானால் நாடு வளம் பெறும். உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் ஊரணிகள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாது. கழக-பாஜக கூட்டணி வலுவான கூட்டணி. மக்கள் செல்வாக்கு மிக்க கூட்டணியாக உள்ளது.

கல்வி மறுமலர்ச்சி ஏற்படுத்தி உள்ளோம். திமுக ஆட்சியில் நிலவிய மின் வெட்டு 2011-ல் புரட்சித்தலைவி அம்மா தலைமையிலான கழக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சட்டம்- ஒழுங்கை பேணி காப்பதில் நாட்டிலேயே தமிழகம் சிறப்பிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சியை சீர்குலைக்க ஸ்டாலின் தேவையற்ற நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். தமிழகத்தில் நிலையான ஆட்சி தொடரவும், வளமான தமிழகம் அமையவும் கழக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

ராமநாதபுரத்தில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம் பெயரில் அரசு கலைக்கல்லூரி ராமேஸ்வரத்தில் நிறுவப்பட உள்ளது. அச்சுந்தன்வயல் – பட்டிணம்காத்தான் சாலை பணிகள் ரூ.34 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளன. மிக விரைவில் மருத்துவக்கல்லூரியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமையும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் தேர்தல் முடிந்த பிறகு வழங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.